
இந்திய தொழிலதிபர்கள் அனைவருமே கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கணிசமான நிதியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 15 பேர் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாகவும், 20 பேர் ரூ.50 கோடிக்கும், 43 பேர் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பவர் தமிழரான ஷிவ் நாடார். யார் யார் எவ்வளவு நன்கொடை வழங்கினர் என்று பார்க்கலாம்.
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸின் இணை நிறுவனரும், நன்கொடையாளருமான ஷிவ் நாடார், இந்தியாவின் சிறந்த நன்கொடையாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவலில் சுமார் $1.1 பில்லியன்களைக் கொண்ட தனது சொத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை வழங்கி வருகிறார். இதற்கென தனி அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
2022 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு நன்கொடையாக சுமார் 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,161 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதில் பெரும்பாலும் கல்விக்காக அளித்துள்ளார். அவரது அறக்கட்டளையின் அறங்காவலர்களில் அவரது மனைவி கிரண் நாடார், மகள் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா மற்றும் மருமகன் ஷிகர் மல்ஹோத்ரா ஆகியோர் உள்ளனர்.
ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி 2022 ஆம் ஆண்டில் பல காரணங்களுக்காக, குறிப்பாக கல்விக்காக சுமார் 411 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது, ரிலையன்ஸ் ஒரு நாளைக்கு 1,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு எட்டு கோடிக்கும் அதிகமான இலவச உணவை வழங்கி இருந்தது.
ஜம்செட்ஜி டாடாவின் இளைய மகன் ரத்தன் டாடா. இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். அவர் தனது செல்வத்தில் குறிப்பிடத்தக்க பகுதியை நன்கொடையாக அளித்துள்ளார். 1919 ஆம் ஆண்டில், ரத்தன் டாடா அறக்கட்டளை 80 லட்சம் ரூபாய் நிதியுடன் நிறுவப்பட்டது, இது தற்போது இந்தியாவின் முன்னணி அறக்கட்டளை என்பதுடன் நம்பகத்தன்மை பெற்று திகழ்கிறது.
விப்ரோவின் 77 வயதான அசிம் பிரேம்ஜி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்கொடை வழங்குவதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து, 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் தனது அறக்கட்டளை மூலம் ரூ. 484 கோடி வழங்கியுள்ளார்.
நிதியாண்டு 2020 மற்றும் நிதியாண்டு 2021-ல், பிரேம்ஜி மிகவும் தாராளமாக நன்கொடை வழங்கி முதல் இந்தியராக உருவெடுத்தார். நிதியாண்டு 2020- இல், அவர் ஒரு நாளைக்கு ரூ. 22 கோடி அல்லது ரூ. 7,904 கோடி நன்கொடை அளித்தார். மேலும் 2021 நிதியாண்டில், பிரேம்ஜி ரூ.9,713 கோடி அல்லது ஒரு நாளைக்கு ரூ.27 கோடி நன்கொடை அளித்தார்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது, "சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க விப்ரோ ரூ. 1,125 கோடி வழங்கி இருந்தது. ரூ. 1,125 கோடியில், விப்ரோ லிமிடெட்டின் அர்ப்பணிப்பு ரூ. 100 கோடி, விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ. 25 கோடி மற்றும் அஸிம். பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடி வழங்கி இருந்தது.
2019 ஆம் ஆண்டில், பிரேம்ஜி தனது ஐடி அவுட்சோர்சிங் நிறுவனத்தில் 7.6 பில்லியன் டாலர் பங்குகளை தனது தொண்டு நிறுவனமான அசிம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு வழங்கி வரலாறு படைத்தார். கொல்கத்தா தெருக்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு தங்குமிடம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் பழங்குடியினப் பகுதிகளில் வசிக்கும் சமூகங்களுக்கு சேவை செய்து வருகிறார். இதேபோன்று விளிம்பு நிலை மக்களுக்கு அசிம் பிரேம்ஜி பெரிய அளவில் உதவி வருகிறார்.
சுஸ்மிதா மற்றும் சுப்ரோதோ பக்சி, ராதா மற்றும் என்.எஸ்.பார்த்தசாரதி ஆகியோருடன் இணைந்து இந்திய அறிவியல் கழகத்திற்கு (IISc) ரூபாய் 425 கோடி நன்கொடையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர். 800 படுக்கைகள் கொண்ட பல சிறப்பு மருத்துவமனை மற்றும் ஒரு முதுகலை மருத்துவப் பள்ளியை உருவாக்க இந்த நிறுவனம் உதவியுள்ளது. இந்திய அறிவியல் கழகம் பெற்றுள்ள மிகப்பெரிய தனியார் நன்கொடை இதுவாகும். சுப்ரோதோ மற்றும் பார்த்தசாரதி இருவரும் மைண்ட்ட்ரீயின் இணை நிறுவனர்கள் ஆவர்.