
இன்றைய காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று மன அழுத்தம். குடும்ப பிரச்சினை, வேலை அழுத்தம் என இதுபோன்ற பல பிரச்சனைகள் எல்லா பக்கங்களில் இருந்து வருவதால், அதை சமாளிக்க முடியாமல் இருக்கும்போது தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. சில சமயங்களில் மன அழுத்தத்தால் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்.
ஆனால், இதற்கு நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். அது வேறேதுமில்லை உடற்பயிற்சி தான். ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை.
பொதுவாகவே, உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவருக்கும் அறிவோம். ஆனால், உடற்பயிற்சி மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் உணர்ச்சி, உடல் மற்றும் மன ரீதியாக ரொம்பவே வலிமையாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
அந்த வகையில் சில பயிற்சிகள் உள்ளன. அவை உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை மன ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாக அமையும். எனவே மன ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
மன ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகள்:
நடை பயிற்சி:
தினமும் காலை நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆம் நீங்கள் ரொம்பவே மன உளைச்சலில் இருந்தால், தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். தினமும் நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்கும். ஒருவேளை உங்களுக்கு காலையில் நடக்க நேரமில்லை என்றால் மாலையில் நடக்கலாம். இதற்காக நீங்கள் அதிக நேரம் நடக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் 15 நிமிடங்கள் மட்டும் நடந்தாலே போதும். அதுவே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
ஓடுதல்:
ஓடுதல் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது நடைப்பயிற்சியைப் போலவே ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. ஓடுதல் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் தினமும் நடப்பது போலவே ஒரு நாள் மன அழுத்தம் குறையும். இது தவிர உடல் மற்றும் உணர்ச்சி அழுத்தங்களும் மழுங்கடிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீண்டநேர உடற்பயிற்சியால் மரணம்? உண்மை என்ன? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் நல்லது?
யோகா:
அதிக டென்ஷன் கவலை மற்றும் கோபம் ஆகியவை நம்முடைய மனதை எப்போதுமே படபடப்பாக வைத்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க சிறந்த வழி யோகா தான். யோகா எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. யோகா அமைதியான உடற்பயிற்சி என்பதால் மனதை முழுமையாக கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் மனதும் அமைதியாக இருக்கும். உங்களது மனம் ஆரோக்கியமாக இருக்க யோகாவை உங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆக்குங்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு 'எந்த வயதில்' உடற்பயிற்சி சொல்லி கொடுக்கனும் தெரியுமா? ஸ்ட்ராங்கான குழந்தைக்கு சூப்பர் டிப்ஸ்!!
சைக்கிள் ஓட்டுதல்:
நடப்பது போலவே சைக்கிள் ஓட்டுதல்லும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். ஆம், சைக்கிள் ஓட்டுதல் மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நல்ல உணர்வு ஹார்மோன் வெளியேறும். இதனால் மனம் எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்கும். மேலும் மகிழ்ச்சியான உணர்வு கிடைக்கும். இதுதவிர, மன ஆரோக்கியம் மேம்படும், கவலை மற்றும் மன சோர்வு நீங்கும்.
பிற உடல் செயல்பாடுகள்:
- நீச்சல் உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளில் ஒன்றாகும். இது மனம் மற்றும் மூளையை ஒருநிலைப்படுத்தும். இதனால் தேவையில்லாத யோசனைகள் வராது. எனவே நீச்சலானது மனசோர்வு, பதட்டம் ஆகியவற்றை குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- நடனம் ஆடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட ஒரு சிறந்த தேர்வாகும். ஆம், நாள் முழுவதும் கணினியில் இருந்து வேலை பார்ப்பவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஏதாவது அல்லது உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு அதற்கு ஏற்ப நடனம் ஆடினால் மனம் புத்துணர்ச்சி அடையும் மற்றும் தேவையில்லாத விஷயங்களை யோசிக்க மாட்டீர்கள். இதனால் உங்களது மனம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும்.