
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது குழந்தைகளை புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். குழந்தைகளை புத்திசாலியாக வளர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். குழந்தையின் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்குப் புத்தகங்கள் படிக்கவும், புதிர் விளையாட்டுகள் விளையாடவும் வாய்ப்புகளை அளியுங்கள். இது குழந்தைகளின் யோசிக்கும் திறனை மேம்படுத்த உதவும். குழந்தைகளின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுங்கள்.
குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுங்கள். போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவியுங்கள். சர்க்கரை கலந்த தின்பண்டங்கள், துரித உணவுகள், உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள். டிவி, செல்போன் போன்றவற்றிற்கு அடிமையாக விடாதீர்கள். இது குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்க செய்து விடும். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். அவர்களை வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். அவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில், ஓவியம், இசை, நடனம் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட வையுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும். முதலில் அதை கண்டறிந்து அதில் அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாடவும், பழகவும் ஊக்குவியுங்கள். அவர்கள் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும், மற்றவர்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புகளை அளியுங்கள். சமூகத்துடன் இணைந்த வாழ்வு அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பிற்காலத்தில் தனித்து இயங்குவும் உதவும். குழந்தைகளின் முயற்சிகளைப் பாராட்டுங்கள். அவர்களின் தவறுகளை மென்மையாகத் திருத்துங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகள் சொல்லும் விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். காது கொடுத்து கேளுங்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தைரியமாக இருக்கவும் கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகுங்கள். குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ அல்லது பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டாலோ அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். குழந்தைகள் ஏதேனும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டால் அதற்கு அவர்களையே தீர்வு காண வைக்க முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும். சிறுவயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால் குழந்தைகள் வளரும் போதே அதிக அறிவாற்றலோடு வளர்வார்கள். குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் மூளையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். எனவே மூளை வளர்ச்சிக்கு உதவும் நட்ஸ், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வையுங்கள்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பாதிக்கும் காரணியாக அமைகிறது. மன அழுத்தத்தைத் தவிர்க்க, சில கர்ப்ப கால யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளை சாப்பிடுங்கள். முன்கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான கருத்துக்கள் மட்டுமே. ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவமான திறமைகள் இருக்கும். உங்கள் குழந்தைகளின் திறமைக்கு ஏற்ப அவர்களை சிறப்பானவர்களாக மாற்றுங்கள். தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.