USA Cost of Living: அமெரிக்காவுல போனா லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்னு நம்ம ஊர்ல நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, மாசம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிச்சாலும், எல்லா செலவும் போக கையில ரொம்ப கம்மியாத்தான் மிஞ்சும் என்பதே நிதர்சனம்.
இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் அமெரிக்கா, கனடா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது. ஆனால், மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தாலும், செலவுகள் போக கையில் மிஞ்சுவது என்னவோ சொற்ப தொகைதான். அமெரிக்காவில் வேலை பார்க்கும் கனவு பலருக்கும் உண்டு, ஆனால் அதிக சம்பளம் வாங்கியும் கையில் குறைவாகவே பணம் மிச்சமிருப்பதை அவர்கள் உணர்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து பல இளைஞர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள். மாதம் $6,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், டாலரில் சம்பாதித்து, டாலரிலேயே செலவு செய்யும்போதுதான் உண்மையான கணக்கே புரியும்.
அமெரிக்காவில் சம்பளம் வங்கிக் கணக்கில் வந்ததும், முதல் வேலையாக வரியைப் பிடிப்பார்கள். ஃபெடரல், ஸ்டேட் மற்றும் சோஷியல் செக்யூரிட்டி என எல்லாம் சேர்த்து, சம்பளத்தில் கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீதம் வரிக்குச் சென்றுவிடும். அதாவது, $6,000 சம்பளத்தில், உங்கள் கைக்கு வருவது $4,500 முதல் $4,800 வரைக்கும்தான்.
சம்பளத்தின் பெரும்பகுதி வீட்டு வாடகைக்கே போய்விடும். கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற நகரங்களில் 1BHK வீட்டுக்கு மாதம் $1,800 முதல் $2,500 வரை வாடகை கொடுக்க வேண்டும். மின்சாரம், கேஸ் மற்றும் வைஃபை பில்லுக்கு மாதம் $300 தனியாக செலவாகும்.
வெளியில் சாப்பிட்டால் செலவு எக்கச்சக்கமாக எகிறிவிடும். வீட்டிலேயே சமைத்தாலும், இந்திய மளிகைப் பொருட்களின் விலை அதிகம். காய்கறிகள், அரிசி என எல்லாமே காஸ்ட்லிதான். வீட்டில் சமைத்துச் சாப்பிட்டாலே மாதம் $500, அதாவது இந்திய ரூபாயில் சுமார் 42,000 ரூபாய் எளிதாக செலவாகும்.
அமெரிக்காவின் பல நகரங்களில் கார் ஒரு அத்தியாவசியத் தேவை. காரின் EMI, பெட்ரோல் மற்றும் இன்ஷூரன்ஸ் எல்லாம் சேர்த்து மாதம் $700 வரை செலவாகும். மருத்துவச் செலவுகள் மிக அதிகம் என்பதால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது கட்டாயம். இதுதவிர, போன் பில், ஷாப்பிங் என மற்ற செலவுகளும் இருக்கின்றன.
இவ்வளவு செலவுகளும் போக, தனியாக வசிக்கும் ஒருவர் மாதம் $500 முதல் $1,000 வரை, அதாவது 40,000 முதல் 80,000 ரூபாய் சேமித்தாலே அது பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை குடும்பத்துடன் வசித்தாலோ அல்லது விலை உயர்ந்த நகரத்தில் இருந்தாலோ, சேமிப்பது இன்னும் கடினம். சம்பளம் அதிகமாக இருந்தாலும், வாழ்க்கைச் செலவும் அதிகமாக இருக்கும் என்பதுதான் அமெரிக்காவின் யதார்த்தம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.