
சமீப காலமாக உடல் நல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. உடல் நலனை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து பலரும் இணையத்தில் தேடுகின்றனர். நம் ஆரோக்கியமானது உணவுகளை மட்டுமின்றி பிற காரணிகளையும் சார்ந்திருக்கிறது. குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களே நம் உடல் நலனுக்கு கேடு தருகின்றன. அந்த வகையில் மூன்று பொருட்கள் நமக்கு மிகுந்த கேடு தருவதாகவும், அதனை சமையலறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் ஹார்ட்வேர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் எய்ம்ஸில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரவ் சேத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் முதலாவதாக கூறி இருப்பது பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள் தான். பிளாஸ்டிக் பொதுவாகவே மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு தரும் ஒரு பொருளாகும். ஆனால் தற்போது பலரும் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பிளாஸ்டிக் பாத்திரங்கள் நாட்கள் செல்ல செல்ல சிதைந்து விடுவதோடு அதிக வெப்பத்திற்கு உள்ளாகும் பொழுது BPA போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடுகிறது. இந்த ரசாயனங்கள் உடலுக்குச் செல்லும் பொழுது அது குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய் போன்ற அபாயகரமான புற்று நோய்களை ஏற்படுத்தலாம். எனவே பிளாஸ்டிக் பொருட்களை சமையல் பொருட்களுக்கு பயன்படுத்தாமல் சிலிக்கான், துருப்பிடிக்காத ஸ்டீல் அல்லது மூங்கில் போன்ற பாத்திரங்களை தேர்ந்தெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் பலரும் பிளாஸ்டிக்கால் ஆன காய்கறி வெட்டும் பலகைகளை பயன்படுத்துகின்றனர். இந்த பலகைகளில் காய்கறிகளை வெட்டும் பொழுது அதில் கீறல் ஏற்பட்டு பிளாஸ்டிக் நுண் துகள்கள் உணவுப் பொருட்களுடன் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அதிகமாக உடலில் சேர்வது உடலுக்கு அபாயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே பிளாஸ்டிக் பலகைகளுக்கு பதிலாக மரப்பலகைகள் அல்லது கண்ணாடி பலகைகளை பயன்படுத்த மருத்துவர் கூறியுள்ளார். மரப்பலகைகளிலும் கீறல் விழும் பொழுது அதில் காய்கறிகளின் துகள்கள் சேர்ந்து பூஞ்சை மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே மரப்பலைகளுக்கு பதிலாக சிலிக்கான் அல்லது கண்ணாடி பலகைகளை பயன்படுத்துவது நன்மை தரும்.
தற்போதைய காலத்தில் நான் ஸ்டிக் பாத்திரங்கள் இல்லாத வீடுகளை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரது வீட்டுகளிலும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுகள் ஒட்டாமல் வருவதாலும் கழுவுவதற்கு எளிதாக இருப்பதாலும் இந்த பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களின் மேற்பூச்சுகள் சிதைந்தால் அது உணவில் கலந்து மனிதர்களுக்கு புற்றுநோய் போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக கீறல் விழுந்த அல்லது சேதமடைந்த நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் மேற்பூச்சுகள் உயர் ரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் இனப்பெருக்க தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கீறல் விழுந்த சேதமடைந்த நான் ஸ்டிக் பாத்திரங்களை யோசிக்காமல் உடனே தூக்கி எறிந்து விடுங்கள். இதற்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இரும்பு அல்லது பீங்கான் பாத்திரத்தை பயன்படுத்துங்கள் என்று மருத்துவர் சேத்தி கூறியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் ஈயம் அதிகம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அது குறித்து விசாரித்த போது அவரது மனைவி 20 ஆண்டுகளாக ஒரே குக்கரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவருக்கு ஈய நச்சுத்தன்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோல நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களே நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் வீட்டு சமையலறையில் இது போன்ற பொருட்கள் இருந்தாலோ அல்லது நீண்ட காலமாக ஒரே பொருட்களை பயன்படுத்தி வந்தாலோ அவற்றை தூக்கி எறிந்து விட்டு புதிதாக வாங்கி பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களை மாற்றிக் கொள்வது நன்மை தரும்.