Sugar cut diet side effects: 30 நாள் சுகர் கட் சேலஞ்ச் ஆ? நன்மையை விட தீமையே அதிகம் என எச்சரிக்கும் ஆய்வுகள்!

Published : Sep 15, 2026, 07:13 PM IST

Sugar cut diet side effects: சுகர் கட் டயட் என்ற பெயரில் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது பிரபலமாகி வரும் நிலையில், சர்க்கரையை அறவே நிறுத்துவது குடல் ஆரோக்கியம், ஹார்மோன் சமநிலை, மனநலனைப் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

PREV
15
சுகர் கட் டயட் உண்மையிலேயே நல்லதா?

Sugar cut diet side effects: சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் உணவுமுறைகளில் சுகர் கட் (Sugar Cut) டயட் உருவெடுத்துள்ளது. குழந்தைகளிடம் சாக்லேட் கொடுப்பது முதல் அலுவலகங்களில் இனிப்புகளைப் பகிர்வது வரை பலரும் சுகர் கட்ல இருக்கேன் என்று மறுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஒரு வாரம் சர்க்கரையைத் தவிர்த்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ற ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் இந்த மோகத்தை மக்களிடையே தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது உண்மையில் உடலுக்கு நன்மையானதா என்பது குறித்து மருத்துவர்கள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.

25
சர்க்கரையை முழுசா நிறுத்திட்டா உடம்பு இளைச்சிடுமா?

சுகர் கட் டயட் என்பதற்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ வரையறை எதுவும் இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், உணவில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரையைக் குறைப்பது அல்லது தவிர்ப்பதே இதன் அடிப்படை நோக்கம் எனக் குறிப்பிடுகின்றனர். நேரடியாக சர்க்கரை சேர்ப்பதை நிறுத்திவிட்டாலே சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துவிட்டதாகப் பலர் தவறாக நினைக்கின்றனர்.

ஆனால், உணவுகளில் உள்ள மறைமுகச் சர்க்கரை (Hidden Sugar) குறித்து விழிப்புணர்வு அவசியம். குறிப்பாக சாஸ், கெட்ச்அப், காலை உணவு தானியங்கள் (Cereals), கிரானோலா மற்றும் யோகர்ட் போன்றவற்றில் கணிசமான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது. இது போன்ற உணவுகளுடன் வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, சுகர் சிரப், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள், சாக்லேட்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

35
சர்க்கரையை அறவே தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

30 நாள் சுகர் கட் சேலஞ்ச், 100 நாள் சுகர் கட் சேலஞ்ச் என இலக்கு வைத்து சர்க்கரையைத் தவிர்ப்பது ஆரோக்கியமான தொடக்கமாக இருந்தாலும், தற்காலிக சவாலாக மட்டும் முடிந்துவிடக் கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீண்டும் சர்க்கரை சேர்த்த உணவுகளுக்குத் திரும்பும்போது, உடல் எடை அதிகரிப்பு, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் மற்றும் இனிப்பு மீதான அதீத ஆசை (Sweet Cravings) ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு மீறினால் மட்டுமல்ல, அறவே தவிர்ப்பதும் உடலுக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குவைத்தில் உள்ள தாஸ்மான் நீரிழிவு நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ரஷீத் அகமது தலைமையிலான நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் எலிகளிடம் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், க்ளீன் ஈட்டிங் என்ற பெயரில் சர்க்கரையை உணவில் இருந்து முற்றிலுமாகத் தவிர்ப்பது நன்மையை விடப் பாதிப்புகளையே ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. சர்க்கரையை அறவே தவிர்த்தது எலிகளின் குடல் ஆரோக்கியத்தைப் பாதித்து, ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னைகளை உண்டாக்கியுள்ளது. இதன்மூலம் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியமற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

45
சர்க்கரையை விட நினைப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

க்ளீன் ஈட்டிங்கிற்கும் சுகர் கட் டயட்டிற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி, கோதுமை, பழங்கள், காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்களுடன் இயற்கையான சர்க்கரைச் சத்தும் இருக்கும். இதில் கூடுதலாக வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட இனிப்புகள் போன்றவற்றைச் சேர்க்காமல் உணவு அப்படியே உண்பது ‘க்ளீன் ஈட்டிங்’ ஆகும். பழங்கள், அரிசி போன்றவற்றில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உட்பட அனைத்து விதமான இனிப்புகளையுமே முற்றிலும் தவிர்ப்பது. இரண்டில் க்ளீன் ஈட்டிங் முறையே உடலுக்கு சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொதுவாக சர்க்கரையைக் குறைக்கும்போது உடல் எடை குறையும். ஆனால், அதிக இனிப்பு சாப்பிட்டுப் பழகியவர்கள் திடீரென அதை முழுமையாகத் தவிர்க்கும்போது முதல் சில நாள்களுக்கு நெஞ்சு படபடப்பு, தலைவலி, எரிச்சல் உணர்வு, சோர்வு மற்றும் இனிப்பு சாப்பிடும் ஏக்கம் ஏற்படலாம். வழக்கமாக அறிகுறிகள் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். மனித உடலுக்கும், குறிப்பாக மூளையின் செயல்பாட்டுக்கும் கார்போஹைட்ரேட் அவசியம். அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பழங்கள், காய்கறிகளில் உள்ள குளுக்கோஸே மூளையின் இயக்கத்திற்கு போதுமானது; தனியாக சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

55
தினமும் எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம்?

உணவில் சர்க்கரையே இல்லாத சூழல் ஏற்பட்டால், மூளை ‘கீடோன்களை’ (Ketones) பயன்படுத்திக் கொள்ளும். கல்லீரலானது உடலில் உள்ள கொழுப்பை உடைத்து ‘கீடோன்’ என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும். இந்த கீடோன் மூளைக்குச் சென்று குளுக்கோஸுக்குப் பதிலாகத் தேவையான ஆற்றலை வழங்கும். சுகர் கட் டயட் தீவிர பழக்கமாக மாறும்போது, சிலருக்கு அது ஆர்த்தோரெக்ஸியா (Orthorexia Nervosa) எனப்படும் மனநலப் பாதிப்பாக மாறக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எப்போதும் சுத்தமான, ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற தீவிர சிந்தனையும், சர்க்கரை ஆபத்தானது என்ற அதீத பயமும், ‘ஓசிடி’ (OCD) போன்ற மன அழுத்தப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு உடலுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மன அழுத்தத்தை உருவாக்குவதாக இருக்கக் கூடாது.

உலக சுகாதார நிறுவனம் ஒருவர் தினசரி எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில், உணவில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரையின் அளவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும். இதை 5 சதவீதத்திற்கும் கீழ் (தோராயமாக ஒரு நாளைக்கு 5 டீஸ்பூன்) குறைப்பது மிகவும் நல்லது. நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், சுகர் சிரப், தேன் ஆகியவற்றில் தாதுக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் சிறிதளவு இருந்தாலும், அவை எதுவும் வெள்ளைச் சர்க்கரைக்கான மாற்று கிடையாது. அவையும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தவே செய்யும்.

சர்க்கரை சேர்த்து பழகியவர்கள் திடீரென ஒரே நாளில் அதை முழுமையாகத் தவிர்ப்பது கடினம். எனவே, முதலில் 2 டீஸ்பூன் சர்க்கரையை 1 டீஸ்பூனாகவும், பின் அரை டீஸ்பூனாகவும் படிப்படியாகக் குறைத்து, பின்னர் முற்றிலுமாகத் தவிர்க்கப் பழக வேண்டும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழும்போது பேரீச்சம்பழம், உலர் திராட்சை போன்றவற்றை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். இதுவும் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories