Standing on salt: கல் உப்பு மீது வெறும் காலில் நிற்பது தூக்கத்தை மேம்படுத்தும், மனஅழுத்தத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. இதன் உண்மை என்ன? அறிவியல் ஆதாரம் இருக்கிறதா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உப்பு என்றாலே சமையலுக்குதானே பயன்படுத்துவோம். ஆனால், சமீபகாலமாக வீட்டின் தரையில் கல் உப்பை கொட்டி, அதன் மீது வெறும் காலில் சில நிமிடங்கள் நிற்கும் பழக்கம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இதை சிலர் Salt Stomping அல்லது Salt Earthing என்று குறிப்பிடுகின்றனர்.
இதனால் மன அழுத்தம் குறையும், தூக்கம் நன்றாக வரும், உடல் சோர்வு குறையும், உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என பல்வேறு கூற்றுகள் பரவி வருகின்றன. இது உண்மையா? உப்பு மீது நிற்பதால் ஏற்படும் பலன் என்ன? யாரெல்லாம் உப்பு மீது நிற்கக்கூடாது? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
உப்பின் மீது ஏறி நிற்பதால் என்ன பயன்?
பாதங்களின் அடியில் ஏராளமான நரம்புகள் உள்ளன. சிலருக்கு உப்புத் துகள்களை மீது காலால் மிதிக்கும்போது, பாதங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஒரு விதமான உணர்வு கிடைக்கலாம். இதனால் தற்காலிகமாக கால்களில் லேசான புத்துணர்ச்சியும், உடல் ரிலாக்ஸாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம்.
ஆனால் இதை வைத்து ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும், ஹார்மோன்கள் சமநிலையாகும், தூக்கப் பிரச்சினை சரியாகும் என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
35
யாரெல்லாம் உப்பின் மீது நிற்கக்கூடாது?
வெட்டு, சிராய்ப்பு, புண், கொப்புளம் அல்லது தோல் உரிந்து காலில் காயம் இருப்பவர்கள் உப்பின் மீது நிற்கக்கூடாது. உப்பு துகள்கள் காயத்தை மேலும் எரிச்சலடையச் செய்யும்.
சர்க்கரை நோயால் சிலருக்கு காலில் உணர்வு குறையலாம். சிறிய காயம் ஏற்பட்டாலும் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே காலில் அழுத்தம் ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
நரம்பு தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் உப்பின் மீது நிற்கக்கூடாது.
உப்பு சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து உலர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் உப்புடன் நீண்ட நேரம் தொடர்பில் இருப்பது வறட்சி, அரிப்பு அல்லது எரிச்சலை அதிகரிக்கும்.
காலில் ஏற்கனவே தோல் பிரச்சினை இருந்தால் வீட்டிலேயே உப்பை வைத்து பரிசோதனை செய்வதைவிட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
ஏற்கனவே இருக்கும் காயம் மோசமாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
55
அப்படியென்றால் செய்யவே கூடாதா?
ஆரோக்கியமான ஒருவருக்கு சிறிது நேரம் உலர்ந்த உப்பின் மீது நிற்பது ஒரு பாரம்பரிய அல்லது வெல்னஸ் நடைமுறையாக இருக்கலாம். ஆனால் அதை மருத்துவ சிகிச்சையாக கருதக்கூடாது.
உப்பு கொட்டி அதன் மீது நேரடியாக ஏறி நிற்பது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை நம்பிக்கைகள் அல்லது தனிப்பட்ட அனுபவங்களே.
உப்பின் மீது வெறும் காலில் நிற்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும், தூக்கம் மேம்படும், மன அழுத்தம் குறையும் போன்ற மருத்துவப் பலன்கள் கிடைக்கும் என்பதற்கு தற்போது வரை வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.