
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வளர வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு ஞானத்தையும் புரிதலையும் ஏற்படுத்துவது சவாலான விஷயம். இந்தப் பதிவில் ஆன்மீகத் தலைவர் சத்குரு பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு குறித்து சொல்லும் ஆறு விஷயங்களை காணலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது பெற்றோரின் முக்கியமான கடமையாகும். குழந்தைகள் பாதுகாப்பாகவும் எதையும் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்துடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியான சூழலில் வளரும் குழந்தைகள் உணர்ச்சி ரீதியாக சமநிலையில் இருப்பார்கள். அவர்களிடம் அதிகப்படியான கோபம், பயம், பதட்டம் ஆகிய குணங்கள் இருக்காது. நேர்மறையான சிந்தனை கொண்டவர்களாக வளர இந்த சூழல் உதவுகிறது.
குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்களோ, அதைப்போலவே பெற்றோரும் இருப்பது அவசியம். பெற்றோரின் செயல்கள், வார்த்தைகள் போன்றவை குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. குழந்தைகள் நேர்மையாக, ஒழுக்கமாக வளர வேண்டுமென பெற்றோர் நினைத்தால், அதே குணங்களை பெற்றோரும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
உங்களுடைய குழந்தைகள் வளரும் போது அவர்களிடம் மூடநம்பிக்கைகள், சித்தாந்தங்கள் போன்றவற்றை திணிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கை படங்களை அவர்களே அனுபவத்தில் பெற அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்டங்கள் நல்லது கெட்டது போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொள்ள உங்களுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதனால் குழந்தைகள் தங்களை கவனித்துக் கொள்ளும் திறன் இயல்பாகவே மேம்படும்.
குழந்தைகளை இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் வகையில் வளர்க்க வேண்டும். உதாரணமாக, மலையேறுதல், பூங்கா செல்லுதல், நிலா பார்த்தல், மரம் நடுதல், தோட்டப் பராமரிப்பு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம். உலகத்தை இயற்கையுடன் இணைந்து தூய்மையான வடிவத்தில் காண அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இயற்கையை ரசிக்கவும், இயற்கையோடு இணைந்து இருக்கவும் அவர்கள் புரிந்து கொண்டால் இயல்பாகவே பொறுமை, சமநிலை போன்ற பண்புகள் அவர்களிடம் வளரும் என சத்குரு குறிப்பிடுகிறார்.
உங்களுடைய கனவுகளையும், விருப்பங்களையும் குழந்தையின் மீது திணிக்கக் கூடாது. உங்களுடைய மன பிம்பத்தை நிறைவேற்றுவது குழந்தைகளின் பொறுப்பல்ல. அவர்களுடைய அனுபவங்களையும் விருப்பங்களையும் மதிப்பது பெற்றோரின் கடமையாகும்.