
முந்தைய காலங்களில் ஒருவருக்கு கண்ணில் பிரச்சனை வந்தால் அதை சரி செய்ய வாய்ப்புகள் கிடையாது. கண் பார்வை இழக்கத் தொடங்கினால் அவருடைய வாழ்வே இருள்மயம் தான். ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் இப்போதைய காலகட்டங்களில் ஒருவருடைய கண் பார்வையை மீட்டெடுக்க முடிகிறது. இதற்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் உள்ளன. டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்ணாடிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக 40 வயதைக் கடக்கும் பெரும்பாலானோர் ரீடிங் கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான் புதியதாக மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துபவர்கள் கண்ணாடி அணிய தேவையில்லை. இந்த மருத்துக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.
புதிய கண் சொட்டு மருந்து:
இந்தியாவின் பெரிய நகரமான மும்பையில் உள்ள என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் தான் அந்த சொட்டு மருந்தை தயாரிக்கும் நிறுவனம். பிரஸ்போபியா என்ற சிகிச்சைக்கு 'ப்ரஸ்வியூ' (PresVu) கண் சொட்டு மருந்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட உலகம் முழுக்க உள்ள மக்களில் 18 பில்லியன் மக்கள் பிரஸ்போபியாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த குறைபாட்டினை களைய ப்ரஸ்வியூ சொட்டு மருந்து உதவியாக இருக்கும்.
பிரஸ்பியோபியா என்றால் என்ன?
இது வயது முதிர்ந்தவர்களுக்கு வரக் கூடிய பாதிப்பு. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அருகில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியாது. அவற்றை கூர்ந்து நோக்குவதால் கண்கள் சிரமப்படுமே தவிர அவர்களால் காண முடியாது. தெளிவற்ற மங்கலான பிம்பத்தையே அவர்கள் காண்பார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களால் புத்தகங்களை படிக்க முடியாது. அதற்கு ரொம்ப சிரமப்படுவார்கள். இந்த பார்வை குறைபாடு ஒருவருக்கு 40 வயதுகளின் இறுதியில் தொடங்கி 60 வயதுகளில் மோசமடையும். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் புதிய சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளது.
என்டோட் ஃபார்மாசூட்டிகல்ஸ் பார்வை குறைபாட்டை சரிசெய்ய தயாரித்த ப்ரஸ்வியூ மருந்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி கிடைத்திருக்கிறது. இதுவே 40 வயதைக் கடந்த பிரஸ்பியோபியா பாதிப்புள்ளவர்கள், கண்ணாடி அணிவதை குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்து. மருந்தை சந்தைப்படுத்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த மருந்து மற்றும் அதன் தயாரிப்பு செயல்முறைக்குக் காப்புரிமை பெறவும் அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: உங்கள் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க ப்ளீஸ்..!!
சொட்டு மருந்தின் செயல்பாடு:
பிரஸ்வியூ கண்களில் போட்ட சில நிமிடங்களில் தன் வேலையை தொடங்கிவிடும். இந்த சொட்டு மருந்தைக் கண்களில் போட்ட 15 நிமிடத்தில் பார்வையைத் திறன் சிறப்படையும். இந்த மருந்து சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 350 இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மருந்தை லேசான முதல் மிதமான பிரெஸ்பியோபியா பாதிப்பு உள்ளவர்களுக்கு பயன்படுத்தலாம். 40 முதல் 55 வயதுடைய நபர்களுக்கு ஏற்றது.
இந்த புதிய கண் சொட்டு மருந்து பிரஸ்பியோபியா பாதிப்பிலிருந்து மீள உதவும். இதன் உதவியால் 24 மணி நேரமும் கண்ணாடி அணிந்து கொள்ள தேவையில்லை. தொடர்ச்சியாக திரையை நோக்குவதால், ஏதாவது படிப்பதால் கண்கள் வறண்டு போகும் வாய்ப்புள்ளது. இந்த சொட்டு மருந்து கண்கள் வறட்சிகாணாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த சொட்டு மருந்தை வருடக்கணக்கில் உபயோகித்தாலும் கண்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.
ப்ரஸ்வியூ சொட்டு மருந்து ஒரே நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை பல ஆண்டு ஆராய்ச்சி செய்த பிறகு தான் தயாரித்துள்ளனர். பிரஸ்பியோபியா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: இனி ஆபரேஷன் வேண்டாம்.. மருந்து வேண்டாம்.. கண் ஆரோக்கியமாக இருக்க 3 அற்புத வழிகள் இதோ..!!