Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!

Published : Jan 15, 2026, 12:18 PM IST

Pongal Entha Thisaiyil Ponga Vendum: சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரங்கள் மற்றும் பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்கள் என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Pongal Entha Thisaiyil Ponga Vendum

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களுக்கும், உழவு செய்த காளைகளுக்கும், உழவுக்கு உதவிய சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது உலகம் எங்கிலும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் ‘மகர சங்கராந்தி’ என்கிற பெயரில் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 15 வியாழக்கிழமை பொங்கல் வைக்க உகந்த நேரங்கள் மற்றும் பொங்கல் பொங்கும் திசைகளுக்கான பலன்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

25
பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

பொதுவாக சூரிய உதயம் அல்லது நல்ல நேரங்களில் பொங்கல் வைப்பது மரபு. 2026 ஆம் ஆண்டு அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைக்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த நேரமாகும். சூரிய உதயத்திற்குப்பின் பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரையும், சற்று தாமதமாக தொடங்க விரும்புபவர்கள் காலை 10:35 மணி முதல் பகல் 01:00 மணி வரையும் வைக்கலாம். மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை ராகு காலமும், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை எமகண்டமும் இருப்பதால் இந்த நேரத்தை தவிர்த்து விடுவது நல்லது.

35
பொங்கல் வைக்கும் நேரம் 2026

பெரும்பாலான மக்கள் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பொங்கல் பொங்குவதை மங்களகரமாக கருதுகின்றனர். சற்று தாமதமாக தொடங்க விரும்புபவர்கள் அல்லது பிற்பகலில் பொங்கல் வைக்க விரும்புவர்கள் மதியம் 01:00 மணி முதல் 1:30 மணிக்குள் வைத்து விட வேண்டும். மாட்டுப் பொங்கல் தினத்தில் பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை வைத்து கால்நடைகளுக்கு நன்றி கூறலாம். சிலருக்கு மாட்டுப்பொங்கல் தினத்தில் படையிலிடும் பழக்கம் இருக்கும். அவர்கள் காலை 9:10 மணி முதல் 10:20 வரையும், அல்லது 12:00 மணி முதல் 1:30 வரையும் படையலிடலாம்.

45
பொங்கல் பொங்கும் திசைக்கான பலன்கள்

பொங்கல் பானையில் பால் பொங்கி வரும் பொழுது அது எந்த திசையை நோக்கி வழிகிறது என்பதை வைத்து அந்த ஆண்டின் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

கிழக்கு: பொங்கல் பானையில் பொங்கல் கிழக்கு நோக்கி வழிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பால் கிழக்கு நோக்கி வழிந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

வடக்கு: பொங்கல் பானையில் பால் வடக்கு நோக்கி வழிவது பணவரவை குறிக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் பணவரவு தாராளமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். குறைந்த ஊதியத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

மேற்கு: பொங்கல் பானையில் மேற்கு நோக்கி பால் வழிவது திருமண தடைகள் நீங்கி, சுப காரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் ஆகும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும்.

தெற்கு: தெற்கு திசையில் பால் பொங்கினால் சற்றே கவனமாக இருக்க வேண்டிய அறிகுறியாக கருதப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு சற்று திருமணம் தாமதமாகக் கூடும். தேவையற்ற அலைச்சல் மற்றும் சிறு மருத்துவ செலவுகள் வரலாம் என்பதால் இறை வழிபாடு அவசியம்.

கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் பொங்கல் வழிவது என்பது மகாலட்சுமி அருளும், பெரும் மங்கலமும் உண்டாவதைக் குறிக்கும்.

55
வழிபடும் முறைகள்

வாசலில் வண்ண கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வீட்டை தயார் செய்ய வேண்டும். புதுப் பானைக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துக்களை கட்டவும். பால் பொங்கி வரும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் தயாரானதும் சூரிய பகவானுக்கு கரும்பு, மஞ்சள், வாழைப்பழம் மற்றும் காய்கறிகளுடன் படையலிட்டு கற்பூர ஆரத்தி காட்டவும். பிறகு வீட்டில் உள்ள அனைவரும் உண்டு மகிழவும். இந்த ஆண்டு உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் பொங்கி பெருகுவதற்கு வாழ்த்துக்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories