உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் விழா உள்ளது. சாதி, மதம் வேறுபாடில்லாமல் கொண்டாடப்படும் பொங்கல் விழா, வடமாநிலங்களில் மகர சங்கராந்தி எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் குழந்தை பருவத்திலிருந்தே, ஜனவரி 14 ஆம் பொங்கல் விழாவை கொண்டாடியிருப்போம். இந்த முறை ஜனவரி 15ஆம் தேதி தான் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாள் மாற்றம் ஏன் என்று புரிந்து கொள்ள சின்ன நேர கணக்கீட்டு முறையை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
கடந்த 1935ஆம் ஆண்டு முதல், 2007ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி அன்று பொங்கல் வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 1862 முதல் 1934ஆம் ஆண்டிற்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வந்தது. இந்தாண்டில் மீண்டும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இது 2080ஆம் ஆண்டு வரை தொடரும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2081 ஆம் ஆண்டு முதல் அடுத்த 72 ஆண்டுகளுக்கு ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் விழா வருமாம். அதாவது 2153ஆம் ஆண்டு வரை இது தொடரும்.
ஏன் இந்த தேதி மாற்றம்?
இந்திய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான கால கணக்கீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது தனுர் ராசியில் இருந்து சூரியன் சுமார் 20 நிமிடம் தாமதமாக மகர ராசிக்குள் நுழைகிறது. இதே போல 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சூரியன் ஒரு மணி நேரம் தாமதமாக மகர ராசியில் நுழைகிறது. அதாவது 72 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சியிலும் சூரியன் ஒரு நாள் தாமதமாக மகர ராசியில் நுழைகிறது. இதனால் தான் பொங்கல் பண்டிகை ஒரு நாள் தாமதமாக கொண்டாடப்படுகிறதாம்.