
நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வுகள் உண்மையில் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சில உடல் நலக்கோளாறுகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கிர்ஃபித் பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) இணைந்து நடத்திய ஆய்வில் நான் ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள பெர்ஃப்ளூரோஅல்கைல் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் (PFAS) ஆகிய ரசாயனங்கள் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது.
நான் ஸ்டிக் பாத்திரங்களின் மேற்பரப்பில் பூசப்பட்டுள்ள டெஃப்ளான் போன்ற பூச்சிகளில் பெர்ஃப்ளோரோஅல்கைல் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை “என்றென்றும் நிலைக்கும் ரசாயனங்கள்” (Forever Chemicals) என்று அழைக்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலிலும், மனித உடலிலும் நீண்ட காலம் அழியாமல் இருக்கும். இந்த ரசாயனங்கள் நீண்ட காலமாக வெளிப்படும் நபர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இன்சுலின் எதிர்ப்பு என்பது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணியாகும். அதாவது இன்சுலினை நமது உடல் திறம்பட செயல்படுத்த முடியாத ஒரு நிலையாகும்.
குறிப்பாக பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் பெண்களின் ஹார்மோன் சமநிலையை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த ரசாயனங்கள் டைப் 2 நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள இந்த ரசாயனங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்து நீரிழிவுக்கு வகுக்கலாம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் பொழுது குறிப்பாக அதிக வெப்ப நிலையில் அல்லது அந்த பாத்திரங்கள் சேதமடைந்து இருந்தால் இந்த ரசாயனங்கள் உணவுடன் கலந்து உடலுக்குள் நுழையலாம். குடிநீர், உணவு பேக்கேஜிங், ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் மூலமாகவும் இந்த ரசாயனங்கள் நம் உடலில் சேரலாம்.
இந்த ஆய்வுகள் நான் ஸ்டிக் பாத்திரங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. என்றாலும் அவற்றைப் பயன்படுத்தும் பொழுது சில முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என்று கூறியுள்ளது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் கீறல் விழுந்திருந்தால் அவற்றை உடனடியாக மாற்றுவது அவசியம். இந்த கீறல்கள் வழியாக ரசாயனங்கள் எளிதில் வெளிப்பட்டு உடலுக்குள் சேரும். மிக அதிக வெப்பநிலையில் நான் ஸ்டிக் பாத்திரங்களை சமைப்பதை தவிர்க்க வேண்டும். மிதமான அல்லது குறைந்த வெப்பத்தில் சமைப்பது பாதுகாப்பானது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் உலோக கரண்டிகளை பயன்படுத்துதல் கூடாது. மரக் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உலோக கரண்டிகள் அதன் மேற்பரப்பில் உள்ள பூச்சை சேதப்படுத்தி ரசாயனங்களை உணவில் கலக்கச் செய்யலாம்.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்பது பல ஆய்வுகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு மாற்றாக இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி அல்லது செராமிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். நான் ஸ்டிக் பாத்திரங்களை வாங்கும்போது பெர்ஃப்ளூரோஅல்கைல் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் இல்லாத பாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு பாத்திரங்களின் லேபிளை படித்து பார்த்து வாங்க வேண்டியது அவசியம். இந்த ஆய்வானது நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும் நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தப்படும் ரசாயனங்களை ஒரு முக்கிய காரணியாக கூறுகிறது. இந்த ரசாயனங்களின் செயல்பாட்டை குறைப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.