Washing Machine: துணிகளைச் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷினில் சேரும் அழுக்குகள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் துர்நாற்றம் வீசும். வீட்டில் இருக்கும் வினிகர், பேக்கிங் சோடா போன்ற எளிய பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்து ஆயுளை அதிகரிக்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து வீடுகளில் வாஷிங் மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணிகளைச் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷினில், நாமே அறியாமல் சோப்பு நுரைகளும், துணிகளில் இருக்கும் அழுக்குகளும், ஈரப்பதமும் சேர்ந்து பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை உருவாக்கிவிடுகின்றன. இதனால் துணிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், மெஷினின் ஆயுள் குறைந்து, மின்சாரமும் தண்ணீரும் அதிகமாகச் செலவாகும். பழுதுபார்ப்பு என்ற பெயரில் வீண் செலவாவதைத் தடுக்க, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே வாஷிங் மெஷினை எப்படிப் புத்தம் புதியதாக மாற்றுவது என்று பார்க்கலாம்.
27
டிரம் பகுதி (Drum Deep Cleaning)
துணிகளில் இருந்து வெளியேறும் அனைத்துக் கொழுப்பு மற்றும் அழுக்குகள் டிரம்மில்தான் தங்கும். மெஷின் காலியாக இருக்கும்போது, அதனை 'Hot Water' (சுடுதண்ணீர்) மோடில் செட் செய்யவும். சோப்பு போடும் பாக்ஸில் இரண்டு கப் வினிகர் ஊற்றி மெஷினை அப்படியே ஆன் செய்யவும். வினிகர் உள்ளே இருக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். தண்ணீர் நிறைந்ததும் மெஷினை பாதியில் நிறுத்தி அரை கப் பேக்கிங் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு சுழற்சியை முடிக்கவும். வினிகர் சுழற்சி முடிந்ததும், டிரம்மிற்குள் நேரடியாகப் பேக்கிங் சோடாவைத் தூவி, மீண்டும் ஒருமுறை சாதாரணமாக இயக்கித் துவைக்கவும். இது துர்நாற்றத்தை முழுமையாக நீக்கும்.
37
சோப்பு மற்றும் லிக்விட் பாக்ஸ் (Detergent Drawer)
நாம் சோப்பு அல்லது திரவம் ஊற்றும் பாக்ஸில்தான் அதிகப்படியான பாசி மற்றும் அழுக்குகள் படியும். இந்த பாக்ஸை லேசாக அழுத்தினால் வெளியே வந்துவிடும். அதனை வெதுவெதுப்பான சோப்பு நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பழைய டூத் பிரஷ் கொண்டு இடுக்குகளில் உள்ள அழுக்குகளைத் தேய்த்துக் கழுவி, துணியால் துடைத்து மாட்டிவிடலாம்.
பிரண்ட் லோட் மெஷின்களில் கதவைச் சுற்றியுள்ள ரப்பர் மடிப்புகளில் தண்ணீர் தங்கி, கறுப்புப் புள்ளிகளாகப் பூஞ்சை பிடிக்கும். வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் ஒரு துணியை நனைத்து, ரப்பர் மடிப்புகளை நன்றாகத் துடைக்கவும். கறை கடினமாக இருந்தால் பிரஷ் பயன்படுத்தலாம்.
57
ட்ரைன் பம்ப் ஃபில்டர் (Drain Pump Filter)
வாஷிங் மெஷினின் முன்பக்கத்தின் கீழே ஒரு சிறிய கதவு போன்ற பகுதி இருக்கும். அதற்குள் தான் அழுக்குகள் தங்கும். அந்தப் பகுதியைத் திறக்கும்போது தண்ணீர் கொட்டும் என்பதால் கீழே ஒரு தட்டையோ அல்லது துணியையோ வையுங்கள். அதன் மூடியைத் திறந்தால் உள்ளே இருக்கும் நாணயங்கள், நூல்கள், தலைமுடி, பொத்தான்கள் போன்ற அடைப்புகளை அகற்றலாம். 2-3 மாதங்களுக்கு ஒருமுறை இதைக் கண்டிப்பாய் சுத்தம் செய்ய வேண்டும்.
67
மெஷினின் ஆயுளைக் கூட்ட சூப்பர் வழிகள்
* மெஷினின் கொள்ளளவை (Capacity) விடக் கூடுதலாகத் துணிகளைத் திணிக்கக் கூடாது. இது மோட்டாரை சீக்கிரம் பழுதாக்கிவிடும்.
* துணிகளைத் துவைத்து முடித்ததும் மெஷினின் கதவை உடனடியாக மூடாமல், அரை மணி நேரம் திறந்து வைத்தால் உள்ளே காற்றுப் பட்டுப் பூஞ்சை காளான் வளராது.
* வாஷிங் மெஷினுக்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் HE (High Efficiency) லிக்விட் அல்லது பவுடர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண சோப்புப் பொடிகள் அதிக நுரையை ஏற்படுத்தி மெஷினைப் பாதிக்கும்.
77
மெக்கானிக்கை அழைப்பது நல்லது
மெஷினில் இருந்து திடீரென வழக்கத்திற்கு மாறான பலத்த சத்தம் வருவது, மின்சார அதிர்வுகள் அல்லது மெஷினின் கீழ்ப் பகுதியில் தண்ணீர் கசிவது போன்ற தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்பட்டால், நீங்களாகச் சரிசெய்ய முயலாமல் உடனடியாக ஒரு தகுதியான மெக்கானிக்கை அழைப்பது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.