பழனி முருகன் கோவில்
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில். போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.
பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருவண்ணாமலை கோவில்
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் சொல்லப்படும் இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் . திருவண்ணாமலையில் அமைந்துள்ள இந்த கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் உள்ளன.கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோயிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அனுமதி பெற வேண்டும் என்பது வழக்கம் ஆகும்.
தஞ்சை பெரிய கோவில்
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் உள்ளது. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும்.
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும்6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித் தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சோழர்களின் கட்டிட திறனுக்கு இன்றளவும் சான்றாக இருக்கிறது தஞ்சை பெரிய கோவில்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.
சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாக உள்ளது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். மதுரைக்காரர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமைக் கொள்ளும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.
அதனால் இந்த தலத்தில் தரித்தாலோ, பெயரைப் படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இங்குள்ள பொற்றாமரை குளத்தில் அமாவாசை, கிரகண காலம், மாதப் பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சுவாமியை தரிசித்தல் வேண்டும். வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.