
வெளிநாட்டுப் பயணங்களுக்கு முக்கியமான பயண ஆவணம் பாஸ்போர்ட். வெளிநாடுகளில் பாஸ்போர்ட்டை தொலைப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இழந்த பாஸ்போட்டை மீட்கும் செயல்முறையை எளிதாக்கும். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ உணர்ந்தால், உடனே செய்யவேண்டிய முதல் வேலை போலீசில் புகாரை பதிவு செய்வதுதான். அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது ஆன்லைனிலோ இதைச் செய்யலாம். இதுதான் தொலைந்துபோன பாஸ்போர்ட் பற்றி முறையாகப் பதிவுசெய்யும் வழி. புதிய பாஸ்போர்ட் அல்லது அவசர சான்றிதழ் பெறுவதற்கு இது அவசியம். பாஸ்போட்டை மீட்பது தொடர்பாகத் தொடர்புகொள்ளும் அதிகாரிகள் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
போலீஸ் புகாரை பதிவு செய்த பிறகு, அருகில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகவும். பாஸ்போர்ட் தொலைந்துபோவது உள்பட வெளிநாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இந்தியக் குடிமக்களுக்கு தூதரகங்கள் உதவி செய்யும். புதிய பாஸ்போர்ட் அல்லது அவசரச் சான்றிதழை (Emergency Certificate) பெறுவதற்கு அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அதன் மூலம் நீங்கள் இந்தியாவுக்குத் திரும்ப முடியும்.
உங்கள் அவசரத்தைப் பொறுத்து, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அவசரச் சான்றிதழைக் கோரலாம்.
புதிய பாஸ்போர்ட் பெற விரும்பினால், அதற்கான செயல்முறைகளுக்கு ஒரு வாரம் ஆகலாம். உங்களின் தற்போதைய முகவரிக்கான சான்று, பிறந்த தேதிக்கான சான்று மற்றும் காவல்துறை அறிக்கை உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அல்லது, நீங்கள் விரைவில் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்றால், அவசரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இது தற்காலிக அனுமதிக்கான ஆவணமாக இருக்கும். ஆனால் இந்தியாவுக்குத் திரும்பி வந்தவுடன் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்தால், நீங்கள் இருக்கும் நாட்டின் தூதரகத்தில் அல்லது ஆன்லைனில் விசாவிற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குத் தேவையான விவரங்கள் மாறுபடலாம். எனவே அந்தந்த நாட்டு விதிமுறைகளைச் சரிபார்த்துகொள்ள வேண்டும்.
உங்கள் பாஸ்போர்ட்டை விரைவாக மீட்டெடுக்க முடியாவிட்டால், மாற்று பயணத் தேதி பற்றி விவாதிக்க, விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். போலீஸ் புகார் அறிக்கையுடன், பாஸ்போர்ட் தொலைந்துபோனதைத் தெரிவித்தால் மாற்றுத் தேதியில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்படலாம்.
நீங்கள் பயணக் காப்பீடு எடுத்திருந்தால், பாலிசி எடுத்த நிறுவனத்தில் புகாரளிக்கவும். பல பாலிசிகளில் இழந்த ஆவணங்களைை மீட்பது தொடர்பான செலவுகள் அடங்கி இருக்கும். குறிப்பாக, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விமானப் பயணத் தேதி மாற்றத்துக்கான செலவுகளை பாலிசி நிறுவனம் கவனித்துகொள்ளும்.
பாஸ்போர்ட் தொலைந்தது குறித்து காவல்துறையில் அளித்த புகார், பாஸ்போர்ட் தொலைந்துபோனதால் ஏற்படும் செலவுகளுக்கான ரசீதுகள் உட்பட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் பத்திரமாகப் பராமரிப்பது அவசியம்.