
மனிதர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய மற்றும் கொடிய நோய்களில் ஒன்றாக தனிமை இருந்து வருகிறது. இந்த தனிமை நம்மை மனச்சோர்வுக்கு இட்டுச் செல்கிறது. சமீபத்திய சர்வதேச ஆய்வு ஒன்று தனிமை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டது. அதன்படி தனிமையானது ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. தனிமை காரணமாக நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் கணிசமாக அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்கு ஆண்டாரியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தனியாக வாழும் மக்களிடம் ஆய்வை மேற்கொண்டனர். 50 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4000 அமெரிக்கர்களிடம் பல ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் அதிக அளவு தனிமையை அனுபவிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 34% அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களில் தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 75% அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. பலரும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தனிமை நோயை ஏற்படுத்தும் ஒரு தீவிர காரணி ஆகும். தனிமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். தூக்கமின்மை, உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், செரிமான அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகிய பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இந்த ஒருங்கிணைந்த விளைவு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.
நமது சமூகம் அல்லது குடும்பத்துடனான தொடர்புகள் வலுவாக இருந்தால் நமது ஆரோக்கியமும் வலுவாக இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை ஆவது மற்றவருடன் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தனிமை குறையும். இது உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும். வீட்டில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பது தனிமையை கணிசமாக குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். செல்லப்பிராணிகளின் சகவாசம் நம்மை உணர்ச்சி ரீதியாக திருப்திப்படுத்துவதுடன், அவற்றுடன் விளையாடுவதும், அவற்றை பராமரிப்பதும் தனிமை உணர்விலிருந்து நம்மை விடுபட உதவும். நம் அன்புக்குரியவருடன் ஒரு நாளைக்கு ஒரு சில நிமிடங்கள் பேசும் பழக்கம் இருந்தால் அது தனிமையை போக்கும்.
தனிமையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். சமைப்பது, ஓவியம் வரைவது, தையல் தைப்பது, பாடுவது, ஆடுவது என ஏதாவது ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ளுங்கள். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வது நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் பொழுது அது மற்றவர்களுடன் மனித தொடர்புகளை உருவாக்கி தனிமையை குறைக்க உதவும். இந்த ஆய்வின்படி தனிமை என்பது மனதிற்கு மட்டுமல்ல உடலுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருவதை நம்மால் காண முடிகிறது. எனவே தனிமையில் இருந்து விடுபட்டு சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.