Palm Oil Health Risks: பிஸ்கட் முதல் நூடுல்ஸ் வரை... நாம் தினமும் சாப்பிடும் பாமாயில் உண்மையிலேயே ஆபத்தானதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Published : Sep 20, 2026, 12:23 PM IST

Palm Oil Health Risks: மருத்துவ ரீதியாக, பாமாயிலில் சுமார் 50% நிறைவுற்ற கொழுப்பு (குறிப்பாக பால்மிடிக் அமிலம்) உள்ளதால், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அதிகரித்து இதய நோய் அபாயத்தை உயர்த்தக்கூடும்.

PREV
15
பிஸ்கட் டூ நூடுல்ஸ் வரை... பாமாயில் உண்மையிலேயே ஆபத்தானதா?

Palm Oil Health Risks: நாம் அன்றாடம் விரும்பிச் சாப்பிடும் மொறுமொறு சிப்ஸ், க்ரீம் பிஸ்கட்டுகள், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டுகளைத் திருப்பிப் பார்த்தால் பாமாயில் (Palm Oil) என்ற பெயர் தவறாமல் இடம்பெற்றிருக்கும். பாமாயில் உடலுக்குக் கெடுதி, இதயத்திற்கு நல்லதல்ல எனப் பல்வேறு விவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, சமீபத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் (Codex Alimentarius) தர நிலைகளுக்கு உட்பட்டு, விரிவான அறிவியல் பரிசோதனைகள் மூலமே பாமாயிலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், FSSAI அமைப்பின் கீழ் இது உணவுப் பயன்பாட்டிற்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட தரமான சமையல் கொழுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியென்றால் பாமாயிலை நாம் தாராளமாக சாப்பிடலாமா? மருத்துவர்கள் & ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? இதன் முழுப் பின்னணியைப் பார்ப்போம்.

25
உணவு நிறுவனங்களின் செல்லப் பிள்ளை பாமாயில்: ஏன் இவ்வளவு மவுசு?

எண்ணெய் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் பாமாயிலை உலக உணவு நிறுவனங்கள் அள்ளிப் பயன்படுத்துவதற்குப் பின்னால் சில தந்திரமான காரணங்கள் உள்ளன. இதில் உள்ள அபரிமிதமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்புத் திறன், உணவுகள் சீக்கிரத்தில் காரல் வாடை அடிக்காமல் நீண்ட காலம் புத்தம் புதியதாக இருக்க உதவுகிறது.

இதற்கு நடுநிலையான, மிதமான சுவையே இருப்பதால், உணவின் அசல் சுவையை இது மாற்றாது. அறை வெப்பநிலையில் பகுதி-திடமாக (semi-solid) இருக்கும். இதனால் பிஸ்கட்டுகள் நல்ல மொறுமொறுப்பாகவும், க்ரீம்கள் மிருதுவாகவும் மாற இதுவே உதவுகிறது. அதிக ஸ்மோக் பாயிண்ட் கொண்டிருப்பதால், கடைகளில் பலமுறை பலகாரங்களைப் பொரித்தெடுக்க இது மிகவும் வசதியானது. இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து கொட்டிக் கிடக்கும் இதன் அதிக விளைச்சலும், குறைந்த விலையும் நிறுவனங்களின் முதல் தேர்வாக இதை ஆக்கியுள்ளது.

35
உலகளவில் இந்தியா எங்கே இருக்கிறது?

2021-ஆம் ஆண்டிலிருந்து உலக நாடுகள் பாமாயில் இறக்குமதிக்காகச் செலவிடும் தொகை 5.6% குறைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சந்தையில் இதன் கொள்முதல் மதிப்பு சுமார் 51.8 பில்லியன் டாலராக இருந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், உலகளவில் பாமாயிலை அதிகம் வாங்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டில் உலகளவில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலில் கிட்டத்தட்ட 58% (28.2 பில்லியன் டாலர்) ஆசிய நாடுகள் மட்டுமே வாங்கியுள்ளன.

45
பாமாயில் ஆரோக்கியத்திற்கு நல்லதா, கெட்டதா?

ஹார்வர்ட் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பாமாயிலில் டிரான்ஸ் கொழுப்புகள் இல்லாததால், இது ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட செயற்கைக் கொழுப்புகளை விடச் சிறந்தது; வெண்ணெயை விடவும் கூட ஓரளவு நல்ல தேர்வுதான். ஆனால், ஆலிவ் எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய் போல இதயத்திற்கு உகந்த ஆரோக்கியமான எண்ணெய் இது கிடையாது.

பாமாயிலில் சுமார் 50 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat - குறிப்பாக பால்மிடிக் அமிலம்) நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பை (LDL) அதிகரிக்கச் செய்து, ரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கி, இதய நோய் அபாயத்தை உயர்த்தும் என எச்சரிக்கின்றனர்.

55
காரசாரமான விவாதங்கள்: நிபுணர்கள் சொல்வது என்ன?

"பாமாயில் மீதான பயம் மிகைப்படுத்தப்பட்டது" - சுமித் ராய் (சாலிதாரிடாட் ஆசியா)

பாமாயிலில் உள்ள ஸ்டீரின் பகுதி பேக்கரி தயாரிப்புகளுக்கு இயற்கையான கெட்டித் தன்மையைத் தருகிறது. இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கும், நீண்ட போக்குவரத்துக்கும் கெட்டுப்போகாமல் தாக்குப் பிடிக்கும் குணம் இதற்கு உண்டு. எனவே, பாமாயில் மீது வைக்கப்படும் சுகாதாரக் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை; அவற்றில் உண்மைத்தன்மை குறைவு.

"அளவோடு சாப்பிடுவது புத்திசாலித்தனம்" - அல்கா ஸ்ரீவஸ்தவா (ஸ்வாத் & மசாலா நிறுவனம்)

பாமாயிலை முழுமையாக வில்லனாகப் பார்க்கத் தேவையில்லை. ஆனால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் வழியாக இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதயத்திற்கு ஆபத்துதான். நுகர்வோர் பாக்கெட் லேபிள்களைப் பார்த்து விழிப்புணர்வோடு வாங்க வேண்டும்.

"வீட்டு உணவுகளுக்கு மாறுங்கள்" - சோனாலி சக்சேனா (மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்)

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் மட்டுமே 59% பங்கு வகிக்கிறது. பாமாயில் கலந்த பாக்கெட் உணவுகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே வறுத்த மக்கானா (தாமரை விதை), சுண்டல் சாட், முளைகட்டிய பயறு சாலட் போன்றவற்றைச் சிற்றுண்டிகளாக உண்பதே இதயத்திற்குப் பாதுகாப்பு என்கிறார்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories