Why Wine Bottles are 750ml: ஒயின் பாட்டில்கள் ஏன் ஒரு லிட்டர் இல்லாமல் 750 மிலி அளவிலும், அடர் பச்சை நிறத்திலும் இருக்கின்றன என்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான வரலாற்று மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. அது குறித்து இங்கு காணலாம்.
ஒயின் போன்ற மதுபான பாட்டில்கள் முந்தைய காலத்தில் கண்ணாடி தொழிற்சாலையில் கைகளால் செய்யப்பட்டன. அந்த காலத்தில் இயந்திரங்கள் கிடையாது. கண்ணாடி மூலப்பொருட்களை உருக்கி, மனிதர்கள் தங்கள் வாயால் காற்றை ஊதி வடிவம் கொடுப்பர். ஒரு சாதாரண மனிதன் ஒரே மூச்சில் ஊதி உருவாக்கக்கூடிய பாட்டிலின் அளவு தோராயமாக 600 மில்லி முதல் 800 மில்லி வரை மட்டுமே இருந்தது. எனவே 750 மில்லி என்பது கண்ணாடி செய்பவர்களுக்கு எளிதான மற்றும் பொதுவான அளவாக மாறியது.
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே ஒயின் வர்த்தகம் பெருமளவில் நடைபெற்றது. பிரிட்டனை சேர்ந்தவர்கள் கேலன் என்ற அளவை பயன்படுத்தினர். ஒரு கேலன் என்பது தோராயமாக 4.5 லிட்டருக்குச் சமம். ஒயின் பேரல்களில் இருந்து பாட்டில்களுக்கு மாற்றும் பொழுது ஒரு கேலன் சரியாக ஆறு பாட்டில்கள் (6x750ml = 4.5 Litre) என கணக்கிடுவது வர்த்தகர்களுக்கு எளிதாக இருந்தது. இதனால் தான் இன்றும் கூட ஒயின் பாட்டில்கள் 6 அல்லது 12 கொண்ட பாக்ஸ்களாக விற்கப்படுகின்றன.
ஒரு நபர் மதுபான விடுதிக்குச் செல்லும் பொழுது சாதாரணமாக பருகும் ஒயின் அளவு 125 மில்லி முதல் 150 மில்லி வர இருக்கும். 750 மில்லி பாட்டிலில் இருந்து சராசரியாக 5 அல்லது ஆறு கிளாஸ் ஒயின் ஊற்ற முடியும். இது ஒரு சிறிய குடும்பத்திற்கோ அல்லது நண்பர்கள் குழுவிற்கு ஒரு வேலை உணவிற்கு மிகவும் சரியான அளவாக அமைந்தது.
ஒயின் கெட்டுப்போகாமல் இருக்க
ஒயின் பாட்டிலைத் திறந்தவுடன் காற்றில் உள்ள ஆக்சிஜன் அதனுடன் வினை புரியத் தொடங்கும். இதனால் ஆக்சிஜனேற்றம் நடைபெறும். ஒரு லிட்டர் பாட்டில் என்றால் அதை ஒரே நாளில் குடித்து முடிக்காமல் வைக்கும் பொழுது ஒயின் சீக்கிரம் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. 750 மில்லி என்பது ஒரே அமர்வில் அல்லது ஓரிரு நாளில் குடித்த தீர்ப்பதற்கு உகந்ததாக இருந்தது.
ஒயின் பாட்டில்கள் ஏன் கருமையாகவோ அல்லது பச்சையாகவோ இருக்கின்றன?
மதுபானத்தில் பெரும்பாலான பாட்டில்கள் அடர் பச்சை அல்லது கருமை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கும் ஒரு வரலாற்று காரணம் உண்டு. 18 ஆம் நூற்றாண்டுகளில் ஒயினை சேமித்து வைக்க கண்ணாடி பாட்டில்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. அப்போது கண்ணாடி தயாரிப்பாளர்களால் மூலப்பொருட்களில் இருந்து இரும்பை முழுமையாக அகற்ற முடியவில்லை. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கண்ணாடியில் ஒரு வித பச்சை நிறம் அல்லது கருமை நிறம் கண்ணாடி பாட்டில்களில் பதிந்து விட்டது.
மதுபானங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவும் அடர் நிறப்பாட்டில்கள்
ஒயினுக்கு ஒளி ஒத்துக் கொள்ளாது என்பதால் இந்த அடர் நிறம் கொண்ட கண்ணாடி பாட்டில்கள் ஒயினை சிறப்பாக சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டன. அடர்நிற கண்ணாடி அதன் வழியே செல்லும் ஒளியின் அளவை குறைத்து அதன் தரத்தை பாதுகாக்க உதவுகிறது. அடர் நிறப் பாட்டில்கள் 8 முதல் 37 சதவீத ஒளியை மட்டுமே ஊடுருவ அனுமதிக்கின்றன. தெளிவான பாட்டில்கள் 90% க்கும் அதிகமான ஒளியை அனுமதிக்கின்றன. எனவே மதுபானங்கள் விரைவாக கெட்டுப் போகாமல் இருப்பதற்கு இந்த அடர் நிறப்பாட்டில்களும் உதவி புரிகின்றன.
1970களில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஒயின் பாட்டில்களுக்கான உலகளாவிய தர நிலையாக இந்த 750 மில்லி அளவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.