
வெனிஸ் இத்தாலியில் அமைந்துள்ளது. வெனிஸ் தண்ணீரில் அமைந்துள்ள ஒரு நகரம். அதனால் மிதக்கும் நகரம் என்பார்கள். தமிழ் திரைப்படங்களின் பல காதல் பாடல்களில் வெனிஸ் நகரை காட்டுவார்கள். படகில் சென்றபடி கதாநாயகனும், நாயகியும் பர்மாமன்ஸ் செய்வார்கள். வண்ணமயான வீடுகள், பாலங்கள் என கண்களுக்கு விருந்துதான் வெனிஸ் நகரம். எங்கு பார்த்தாலும் அழகிய காட்சிகள் தான். உலகிலயே அழகான சுற்றுலா தலம் எது என யோசித்தால் அதில் வெனிஸ் நிச்சயம் இடம்பெறும். கால்வாயின் மத்தியில் அமைந்துள்ள வெனிஸ் நகரத்தை விரும்பாத காதலர்கள் குறைவுதான். ஆனால் இந்த நகரம் ஏன் மிதக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது? என பலருக்கும் தெரியாது. ஒரு நகரத்தில் எத்தனையோ சிறப்புகள் இருக்க ஏன் மிதப்பது ஒரு சிறப்பானது? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.
வெனிஸ் நகரத்தில் மொத்தமாக 417 மிதக்கும் பாலங்கள் காணப்படுகின்றன. சுமார் 72 பாலங்கள் தனியாருக்கு சொந்தமானவையாம். இது தவிர கால்வாய்கள் 177 காணப்படுகின்றன. வீடுகள் எண்களால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். கால்வாயில் பெரிய மற்றும் ஆழமான கால்வாய்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஆங்கில எழுத்தான 's' வடிவில் இருப்பது கிராண்ட் கால்வாயாகும். இதன் சிறப்பே இந்த கால்வாய் தான் வெனிஸை இரண்டாக பிரிக்கும். அற்புதமான கட்டடக்கலை தான் வெனிஸ் நகரத்தின் முக்கிய சிறப்பாகும். பொதுவாக மே, ஜூன் ஆகிய மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி எடுக்கும். இந்த நேரத்தில் வெனிஸில் மிதமான வானிலை தான். அதனால் மக்கள் அந்த நேரம் வெனிஸுக்கு செல்வார்கள். இந்நகரத்திற்கு கால்வாய் நகரம், மிதக்கும் நகரம் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஏனென்றால் இங்கு கால்வாய்களில் தான் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளும் இத்தாலியும் தனித்துவமான கட்டிடக்கலையை பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கும்.
வெனிஸ் நகரம் ஆரம்ப காலத்தில் சதுப்பு நிலமாக இருந்தது. வறுமையின் பிடியில் இருந்து தப்ப வெனிஸ் மக்கள் கடற்கரைக்கு அருகே இருந்த சிறிய தீவுகளை நோக்கி படகில் தப்பியோடினர். சுற்றிலும் கிட்டத்தட்ட 124 தீவுகள் இருந்தன. வெனிஸ் நகர் மிதக்கும் நகரமாக உருவாக வேண்டுமென்றால் அதில் மனிதர்கள் வசிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். வீடுகள், கால்வாய்கள், பாலங்கள் போன்றவை அமைக்க வேண்டுமென்றால் அங்கு நீரை வடிகட்டுவது அவசியம். பின்னர் உப்பு நீர் கால்வாய்களை உருவாக்க வேண்டும். இந்த வேலைகளை படிப்படியாக முடித்த பின் உறுதியான கரைகளை எழுப்ப வேண்டும். இதற்கு மேல்தான் வீட்டு கட்டுமானங்களை உருவாக்க முடியும்.
வெனிஸில் முதலில் கால்வாய்களை தோண்டினர். அங்குள்ள களிமண்ணை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கால்வாய்களை தோண்டிய பின்னர் அதனுடைய கரையில் நீர் எந்த வகையிலும் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் மரத்தடுப்புகளை அமைத்தனர். இந்த மரத்தடுப்புகள் கீழே உள்ள களிமண் பரப்பின் ஊடாக நன்கு பதியுமாறு ஊன்றப்பட்டது. இந்த அமைப்பின் மீது மரப்பலகைகளை அடுக்கி அதற்கு மேல் கற்களை வைத்து வீடுகள் கட்டியுள்ளனர். இந்த நகரத்தில் காடுகள் காணப்படாததால் பாலங்கள் அமைக்க, வீடுகள் கட்ட என பிற நாடுகளில் இருந்து மரங்களை இறக்குமதி செய்துள்ளனர். இவை தண்ணீருக்குள் இருந்தாலும் அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்காமல் இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 நீளமான நதிகள்; லிஸ்டில் காவிரி எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?
இந்த மரங்களில் அரிப்பு ஏற்படாததற்கு அறிவியல்ரீதியாகவும் ஒரு காரணம் உள்ளது. வெனிஸில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் நுண்ணுயிரிகள் அரிதாகவே இருக்கின்றன. இந்த காரணமே மரங்கள் அழிக்கப்படாமல் உறுதியாக இருப்பதற்கு முக்கியமாக கருதப்படுகிறது. நீரில் மூழ்கி காணப்படும் மரங்கள் நாளாக நாளாக இறுகி கற்கள் போல மாறுவது மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. தாதுக்கள்தான் மரங்களின் உறுதியான இந்த தன்மைக்கு காரணமாக இருக்கிறது. இதனால் தான் காலம் காலமாக வெனிஸில் மிதல்கும் வீடுகள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கின்றன. வெனிஸ் கால்வாயில் ஆழம் அதிகம் இல்லை. சுமார் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை தான் ஆழம் உள்ளது. இங்குள்ள பெரிய கால்வாய் 5 மீட்டர் ஆழம் கொண்டது. இதைவிட கியூடெக்கா கால்வாய் அதிக ஆழம் உடையது. அது 12 முதல் 17 மீட்டர் வரை ஆழமாக இருக்கும்.
ஒரு ஆய்வில் வெனிஸ் நகரம் ஒரு வருடத்தில் சுமார் 1 முதல் 2 மிமீ நீரில் மூழ்குவதாக தெரியவந்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டில் வெனிஸ் நகரமானது 1,20,000 மக்கட்தொகை கொண்டிருந்தது. தற்போது பாதியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எடை தாங்காத களிமண் கொண்ட பரப்பை தொழில்நுட்பம் பயன்படுத்தி கட்டமைத்த வெனிஸ் மக்களின் அறிவுக் கூர்மை பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் பிளாட்பார்மே இல்லாத பிசியான ரயில் நிலையம்; எங்கு உள்ளது தெரியுமா?