10 வயதில் கூட்டு பாலியல் வன்கொடுமை; பிழைப்புக்கு பிச்சை போன்ற துயர்களை கடந்து மிளிரும் 'நாஸ் ஜோஷி'யின் கதை!

First Published Jan 7, 2023, 6:15 PM IST

Inspiring story of Naaz Joshi: தனது 10 வயதில் கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளான நாஸ் ஜோஷி, கடினமான பாதைகளை கடந்து தற்போது சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றுள்ளார். 

எல்லோருக்கும் தான் துயரங்கள் இருக்கின்றன. ஆனால் வெகு சிலரே அதை தாண்டி சாதனையாளர்கள் ஆகின்றனர். அந்த வரிசையில் தனித்துவமான இடத்தை நாஸ் ஜோஷி பிடித்துள்ளார். ஒருவர் கடினமான உழைப்பு அவரை நிச்சயம் கைதூக்கிவிடும் என்பதற்கு ஜோஷி உதாரணம். 

இவர் 2021-22 ஆம் ஆண்டு சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை தனதாக்கியுள்ளார். இது ஒரேநாளில் நடந்ததா? எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். இந்த இடத்திற்கு வர அவர் பல இன்னல்களை கடக்க வேண்டியிருந்தது. டெல்லியில் பிறந்த ஜோஷி, தோற்றத்தில் ஆணாக அறியப்பட்டாலும் தன்னை பெண்ணாகவே உணர்ந்தார். அவரது பாவனைகளும் அப்படியே தான் இருந்தன. அவருடைய பதின்பருவத்தில் குடும்பத்தினர் இதனை கண்டுகொண்டனர். 

எல்லா குடும்பத்தை போலவும் தான் ஜோஷி குடும்பத்திலும் நடந்தது. தன் பிள்ளை திருநங்கை என தெரிந்ததும் பெற்றோர் அவரை மாமா பொறுப்பில் விட்டுவிட்டனர். 10 வயதில் ஜோஷி பாலினத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார். அவருடைய சொந்த மாமாவே நண்பர்களோடு சேர்ந்து நாஸியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த அவலம் நடந்தேறியது. இதனால் பலவீனமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குதான் மற்றொரு திருநங்கையை சந்தித்து உதவி பெற்றுள்ளார். 

அதன் பிறகு ஜோஷி தன் சொந்த அடையாளத்துடன் வாழ்க்கையை தொடங்கினார். பிழைப்புக்காக பிச்சை எடுக்கவும் நேரிட்டது. சில மசாஜ் சென்டர், பார்களிலும் வேலை கிடைத்தது. கிடைத்த பணத்தை வீணடிக்காமல் கல்வியில் முதலீடு செய்தார். எல்லா துயருக்கு மத்தியிலும் கல்வியின் கரங்களை இறுகப் பற்றி கொண்டார். பேஷன் டிசைனிங் படிப்பை படித்துமுடித்தார். படிப்பை முடித்த பின்னர் ஜோஷி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து தன்னை முழுவதுமாக மாற்றி கொண்டார். 

இதையும் படிங்க; ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவது ஏன்? அதன் பின்னணி என்ன? முழு தகவல்கள்!

இப்படிதான் பேஷன் டிசைனிங் படித்து அவர் மாடலிங் துறைக்குள் எட்டு வைத்தார். ஜோஷிக்கு தன் திறமை மீது நம்பிக்கை இருந்தது. அவர் டெல்லி தெருக்களில் சற்றும் தயங்காமல் பெண்களைப் போல ஆடை உடுத்தி போட்டோஷூட் செய்தார். இந்த முயற்சிகள் அவருக்கு ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடத்தை பிடித்து கொடுத்தது. இதன் பின்னர் தான் உலக அளவில் நடந்த அழகி போட்டியில் கலந்து கொண்டு ஜோஷி வென்றார். 

ஒருமுறையல்ல, 3 முறை தொடர்ந்து உலக அழகி போட்டியில் இவர் பட்டத்தை வென்றுள்ளார். இது தவிர 8 அழகிப் போட்டிகளில் ஜோஷி வெற்றி வாகை சூடியுள்ளார். சர்வதேச அளவில் இத்தனை முறை அழகி பட்டம் வென்ற முதல் திருநங்கை நாஸ் ஜோஷிதான். அவரது எல்லா துயருக்கும் இந்த வெற்றிகள் மருந்திடுகின்றன. முன்னேற துடிக்கும் எல்லோருக்கும் ஜோஷி முன்மாதிரி என்றால் மிகையல்ல. 

இதையும் படிங்க; உப்புக்கு போரா? உப்பு வரலாறும் வினோத உண்மைகளும்!

click me!