
வெங்காயமும், பூண்டும் இல்லாத சமையலறைகளை இந்தியாவில் காண முடியாது. ஏனென்றால் பெரும்பாலான உணவுகளில் வெங்காயம், பூண்டு இரண்டும் முக்கிய பங்காற்றுகின்றன. அவை சுவையை மேலும் கூட்டும். வெறும் சுவை மட்டுமின்றி வெங்காயம், பூண்டு இரண்டிலும் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகளும் உள்ளன.
சிலர் பழைய சோற்றிற்கு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவார்கள். சில உணவுகளில் கூட வெங்காயம், பூண்டு பச்சையாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மோர், கூழ் போன்றவை தயார் செய்யும்போது பச்சையாக வெங்காயத்தை நறுக்கி போடுவார்கள். சில சட்னிகளில், ஊறுகாயில் பூண்டு பச்சையாக சேர்க்கப்படுகிறது. இப்படி பச்சையாக பயன்படுத்துவதால் வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கின்றனவா? என இந்த பதிவில் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
வெங்காயம், பூண்டை பச்சையாக உண்ணும்போது அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் அப்படியே கிடைக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் பல நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கமுடியும்.
கொழுப்பு குறையும்:
வெங்காயம், பூண்டில் காணப்படும் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றங்கள் பச்சையாக உண்ணும்போதும் முழுமையாக கிடைக்கின்றன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது கொலஸ்ட்ரால் அளவையும் கணிசமாகக் குறைக்கிறது. கொழுப்பு ரத்தகுழாய்களில் படிவதால் ஏற்படும் மாரடைப்பு அபாயம் குறைகிறது.
செரிமானத்திற்கு உதவும்:
வெங்காயம், பூண்டு ஆகியவை நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனை பச்சையாக உண்பது நல்லது. இதில் உள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றிலுள்ள எரிச்சலூட்டும் நோயின் அறிகுறிகளை தணிக்கிறது. சமைத்த வெங்காயம் கூட செரிமானத்திற்கு நல்லது தான்.
இதையும் படிங்க: பெயரில் தான் இது சின்ன வெங்காயம்- ஆரோக்கியத்தில் இது மிகவும் பெருசு..!!
இதய பாதுகாப்பு:
வெங்காயம், பூண்டில் உள்ள நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இரத்தத்தில் காணப்படும் லிப்பிட்யை மேம்படுத்துகின்றன. ஆகவே இதய நோய்களின் வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நோய்த்தொற்று அபாயம் குறைக்கிறது.
புற்றுநோய் தடுப்பு:
வெங்காயம், பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள் போன்றவை பச்சையாக உண்ணும்போதும் கிடைக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கும். இதனால் புற்றுநோய், இதய நோய் போன்ற கடுமையான நோய்களுடைய அபாயம் குறைகிறது. பச்சையான வெங்காயம், பூண்டு சாப்பிடும்போது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சல்பர் கலவைகள் உடலுக்கு கிடைக்கின்றன. இது வயிறு, மலக்குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.
இதையும் படிங்க: பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க.. கெட்ட கொலஸ்ட்ரால் மளமளவென குறையும்!
பக்கவிளைவுகள்:
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டால் நம்பமுடியாத நன்மைகள் கிடைக்கும். ஆனாலும் அவ்வற்றை குறைவான அளவில் தான் சாப்பிட வேண்டும். எந்த உணவையும் அளவுக்கு மீறி உண்பதால் நன்மையை விட அதிக பக்க விளைவுகள் கிடைக்கும். செரிமான பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். அதனால் அளவாக பச்சை வெங்காயம், பூண்டினை சாப்பிடலாம். குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிருங்கள். வெங்காயத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை உண்டு. அதனால் மழைகாலத்தில் பச்சையாக உண்ண வேண்டாம். வெயில் நேரங்களில் உடலுக்கு நன்மை பயக்கும்.
வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டும் சத்தானதாக இருந்தாலும், பச்சையாக சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர் காரணமாக சுவாசம், வியர்வையில் வாசனையை ஏற்படுத்தும். பச்சையாக உண்ண விரும்பினால் இதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.