MRI Scan மெஷினுக்குள் மாட்டி உயிரிழந்த நபர்.! MRI ஸ்கேன் எடுக்கும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Published : Jul 25, 2025, 02:37 PM IST

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க சென்றபோது இயந்திரத்திற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக கவனிக்கப்பட வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷினில் சிக்கி உயிரிழந்த நபர்

சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 61 வயதான நபர் ஒருவர் கழுத்தில் இரும்பு சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்துள்ளார். இயந்திரத்தின் சக்தி வாய்ந்த காந்தபுலத்தால் அவர் உள்ளிழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இரும்பு சங்கிலி அவரது மூச்சுக்குழாயை இறுக்கியதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துக் கொள்ள செல்லும் பலருக்கும் ஒரு வித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணம் இந்த கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு சக்தி வாய்ந்த காந்தபுலங்களை கொண்ட பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன் செய்யும் பொழுது குழாய் அமைப்பின் உள்ளே ஒருவர் அனுப்பப்படுவார். இது மருத்துவ ரீதியாக மிகவும் உதவிகரமானது மற்றும் பாதுகாப்பானது.

27
எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன?

இருப்பினும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் செல்வதற்கு முன்னர் சில வழிகாட்டுதல்களை பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எம்ஆர்ஐ என்பது மருத்துவத் துறையில் சக்திவாய்ந்த துல்லியமான நோய் கண்டறியும் கருவியாகும். இது எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போல கதிர்வீச்சுகளை பயன்படுத்துவதில்லை. மாறாக சக்தி வாய்ந்த காந்த புலங்கள் மற்றும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி உடலின் உள்ளுறுப்புகள் திசுக்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் விரிவான படங்களை உருவாக்குகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் என்பது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், அதன் சக்தி வாய்ந்த காந்தப்புலம் காரணமாக சில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அப்போதுதான் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும். அதற்கான சில வழிகாட்டு முறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

37
எம்ஆர்ஐ ஸ்கேன் அறையில் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள்

முக்கியமாக எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்னர் உலோகப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இது மிகவும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை. அனைத்து வகையான உலோகப் பொருட்களையும் அகற்ற வேண்டும். கழுத்தணிகள், மோதிரங்கள் காதணிகள், வளையல்கள், நகைகள், கைக் கடிகாரங்கள், சாவிகள், நாணயங்கள், ஏடிஎம் கார்டுகள், பர்ஸ், ஹேர் கிளிப்புகள், ஹேர்பின்கள், ஷூ, பெல்ட், ஊக்கு, உலோக ப்ரேமுடன் கூடிய மூக்கு கண்ணாடிகள், செவிப்புலன் கருவிகள், கழற்றி பொருத்தக்கூடிய செயற்கை பற்கள், உலோக பட்டன்கள், ஜிப்பர்கள் கொண்ட உடைகள் ஆகியவற்றை அணிதல் கூடாது. பெரும்பாலான ஸ்கேன் மையங்களில் நோயாளிகளுக்கு சிறப்பு கவுன் வழங்கப்படும். உங்கள் உடலில் ஏதேனும் உள் வைப்புகள் இருந்தால் ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர் மருத்துவமனை ஊழியர்களிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

47
உடலுக்குள் பொருத்தப்பட்ட கருவிகள்

ஃபேஸ் மேக்கர், கோக்லியர் உள் வைப்புகள், அனியூரிசம் கிளிப்புகள், செயற்கை மூட்டுகள், அறுவை சிகிச்சைக்கு பின்னர் வைக்கப்படும் உலோகத் தகடுகள், திருகுகள், ஊசிகள், மருத்துவ பம்ப், சிலவகையான கருத்தடை சாதனங்கள், உடலில் ஏதேனும் துப்பாக்கி குண்டுகள் அல்லது உலோகத் துண்டுகள் இருந்தால், டாட்டூக்கள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். இந்த வகையான உள் வைப்புகள் எம்ஆர்ஐ ஸ்கேனின் காந்தப் புலத்தால் பாதிக்கப்படலாம் அல்லது உள் வைப்பு சூடாகி உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தலாம். சில உள்வைப்புகள் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வதற்கு முன் தங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வது தவிர்க்கப்படுகிறது.

57
முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்

ஸ்கேன் அறைக்குள் நுழைவதற்கு முன் மருத்துவமனை ஊழியர்கள் உங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். அதை கவனமாக பின்பற்ற வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக அவர்களிடம் கேட்க வேண்டும். சிலர் ஸ்கேன் எடுப்பதை எண்ணி பதற்றம் அடையலாம். இது போன்ற சூழ்நிலையில் உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கலாம். அதிக பதற்றம் இருந்தால் அவர்கள் உங்களுக்கு லேசான மயக்க மருந்து அல்லது பதட்டத்தை குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தலாம். பெரும்பாலான நவீன எம்ஆர்ஐ இயந்திரங்களில் ஸ்கேன் எடுக்கும் பொழுது நோயாளிகளுடன் பேசக்கூடிய இன்டர்காம் வசதி இருக்கும். அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக இதன் மூலம் தெரிவிக்கலாம். எம்ஆர்ஐ இயந்திரம் செயல்படும்பொழுது அதிக சத்தத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க காது அடைப்பாண்கள் வழங்கப்படும். இதை பயன்படுத்துவது சத்தத்தை குறைத்து பதற்றத்தை குறைக்க உதவும்.

67
எம்ஆர்ஐ ஸ்கேன் எவ்வாறு செய்யப்படும்

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் பொழுது ஸ்கேனர் கருவியுடன் பொருத்தப்பட்ட தட்டையான படுக்கையில் படுக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கை கருவிக்குள் நகர்த்தப்படும் எந்த பகுதியை ஸ்கேன் செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்து ஸ்கேனருக்குள் நகர்த்தப்படுவீர்கள். இது ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராபரால் இயக்கப்படுகிறது. ஸ்கேன் என்பது எடுக்கும் இடத்தை பொறுத்து 15 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். இது ஒரு வலியில்லா செயல்முறையாகும். இந்த செயல்முறையின்போது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உங்களுடன் இருப்ப அனுமதிக்கப்படலாம். முடிந்தவரை அசையாமல் இருக்க வேண்டும். எம்ஆர்ஐ ஸ்கேனர் எடுக்கும் படங்களை பதிவு செய்ய கணினி தனி அறையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ரேடியோகிராஃபர் அந்த கணினியை இயக்குவார். ரேடியோகிராஃபர் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றினால் இது ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும்.

77
எம்ஆர்ஐ ஸ்கேன் பாதுகாப்பானது, பயம் தேவையில்லை

ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர் பொதுவாக மெட்டல் டிடெக்டர் போன்ற சாதனங்கள் கொண்டு சோதிக்கப்படும். எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னரே ஸ்கேன் எடுக்க நோயாளிகள் அனுமதிக்கப்படுவார். எம்ஆர்ஐ ஸ்கேன்களின் போது பயன்படுத்தப்படும் காந்த புலன்கள் மனித உடலுக்கு தீமை விளைவிக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காந்தப்புலங்களால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எம்ஆர்ஐ ஸ்கேன்கள் என்பது பாதுகாப்பான நடைமுறைகளில் ஒன்றாகும். வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் அது குறித்த அச்சம் பதற்றம் கொள்ள தேவையில்லை. எனவே மருத்துவர் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிந்துரைத்தால் எந்தவித அச்சமும் இல்லாமல் முறையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories