
மீன் புரதச்சத்து மிகுந்த சத்தான உணவு. பலருக்கும் விருப்பமான உணவுகளிலும் இது முக்கியமானது. தண்ணீர் தொட்டி முதல் கடல் வரைக்கும் பல நீர்நிலைகளில் வாழும் மீன்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. குழம்பில் போடும் மீன்கள் தான் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் பலருக்கும் பொரித்த மீன்கள் தான் பிடித்தமானதாக இருக்கும்.
மசாலாவை தடவி மீன்களை அதில் ஊறவிட்டு கடாயில் எண்ணெய் கொதிக்கும்போது அதில் போட்டு பொரித்து எடுத்தால் சுவை அபாரமாக இருக்கும். ஆனால் சாப்பிட்டு முடித்த பிறகுதான் மீன் பொரித்த எண்ணெயை என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் குழம்பிவிடுவார்கள். சிலர் அந்த எண்ணெயை வடித்த சூடான சோற்றில் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வளவு எண்ணெயையும் சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதல்ல.
அதற்காக மீன் பொரித்த எண்ணெயை தூக்கி எறிவதும் நல்ல முடிவல்ல. அதை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்று இங்கு காண்போம். இந்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்துங்கள். மீன் எண்ணெய்யில் உள்ள வாசனையை குறைத்து கொள்ள பச்சை கற்பூரம் கலந்து கொள்வது நன்றாக இருக்கும்.
பூச்சி தொந்தரவு குறைய!
இரவில் பூச்சி தொந்தரவு அதிகமாகும் சமயத்தில் மீன் எண்ணெய் நமக்கு கை கொடுக்கும். மீன் பொரித்த எண்ணெயை எடுத்து ஒரு காகிதத்தில் ஊற்றினால் நன்கு ஊறிவிடும். பூச்சிகள் அதிகம் காணப்படும் இடத்தில் இந்த காகிதத்தை தொங்கவிட்டால் பூச்சிகள் கவனம் அதன் மீது திரும்பும்.
இதையும் படிங்க: ஜாக்கிரதை.. ஒருமுறை சமைத்த எண்ணெய்யை அடிக்கடி பயன்படுத்தினால் இந்த பாதிப்பு ஏற்படலாம்..
வெளிச்சம்:
வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக மீன் பொரித்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதற்கு முன்னதாக மீன் பொரித்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்துங்கள்.
பொருள்களை பொலிவூட்ட!
வீட்டில் இருக்கும் மேசை, நாற்காலி போன்றவை மங்கிய தோற்றத்தில் இருக்கும். அதனை பொலிவூட்ட இந்த எண்ணெய்யை பாலிஷ் போல பயன்படுத்தலாம். தோலில் செய்த செருப்பு, தோற்பை, பெல்ட் போன்றவற்றை பாலிஷ் செய்ய மீன் எண்ணெயை உபயோகம் செய்யலாம். பச்சை கற்பூரம் சேர்ப்பதால் மீன் மணம் குறையும்.
இதையும் படிங்க: இதய நோயாளிகளுக்கு சிறந்த சமையல் எண்ணெய்கள் இவை தான்!
உயவு பொருள்:
பொருள்களில் உராய்வு ஏற்படுவதை தடுக்க கிரீஸ் போன்ற உயவு பொருளை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள கதவில் தேவையில்லாத சத்தம் வர காரணம் அதில் உள்ள உராய்வு தான். வீட்டிலிருக்கும் கதவு, கேட் போன்றவற்றில் சத்தம் எழாமல் இருக்க மீன் பொரித்த எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாகனங்களுக்கும் உயவுப்பொருளாக உபயோகிக்கலாம். சைக்கிள் சக்கரங்கள், சங்கிலியில் போட்டால் உராய்வு பிரச்சனை வராது.
உணவுக்கும் பயன்படுத்தலாம்!
வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு கொடுக்கும் உணவில் மீன் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தி வைக்கலாம். அந்த வாசனையை விரும்பி விலங்குகள் நன்றாக சாப்பிடும்.
மீன் பொரித்த எண்ணெய் மட்டுமின்றி, பஜ்ஜி, வடை போன்றவை செய்த மற்ற எண்ணெய்யையும் இதை போல மீண்டும் பயன்படுத்தலாம்.