
பொதுவாக குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்வது வழக்கம். இதனால் சில சமயங்களில் சில பெற்றோர் குழந்தைகள் செய்த தவறை பொறுத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அதாவது அடிப்பது, கோபமாக திட்டுவது போன்ற கடுமையான தண்டனைகளை குழந்தைகளுக்கு வழங்குவார்கள். ஆனால் இப்படி குழந்தைகளிடம் நடந்து கொள்வதன் மூலம் மேலும் தவறு செய்ய அவர்களை தூண்டும்.
எனவே குழந்தைகளை தண்டிக்காமல் அவர்கள் செய்த தவறை அவர்களுக்கு உணர வைக்க சில முறைகளை பின்பற்ற வேண்டும். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள்;
உங்கள் குழந்தை தவறு ஏதேனும் செய்தால் அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள். ஆம், உடற்பயிற்சி அவர்களுக்கு ஒரு சிறந்த தண்டனையாக இருப்பது மட்டுமின்றி அவர்களது ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. இதற்கு நீங்கள் அவர்களை படிக்கட்டுகளில் ஏற இறங்க சொல்லுங்கள். சைக்கிள் ஓட்டுவது, ஒரே இடத்தில் குதிப்பது போன்ற எளிய பயிற்சிகளை செய்ய வைக்கவும்.
அதிகாலையில் ஓட சொல்லுங்கள்:
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்தால் அவர்களை தண்டிக்க விரும்பினாலோ மற்றும் அவர்கள் செய்த தவறை உணர்த்தும் விதமாக அதிகாலையில் அவர்களை ஓட சொல்லுங்கள். இப்படி உங்கள் குழந்தையை நீங்கள் தண்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் தவறை செய்யவும் மாட்டார்கள். மேலும் இந்த தண்டனை அவர்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வீட்டை சுத்தம் செய்ய சொல்லுங்கள்:
உங்கள் குழந்தை தவறு செய்யும் போது அவர்களை தண்டிக்க விரும்பினால் அவர்களை அடிப்பது மற்றும் திட்டுவதற்கு பதிலாக அவர்களை வீட்டை சுத்தம் செய்ய சொல்லுங்கள். பெரும்பாலும் குழந்தைகள் இந்த தண்டனையை விரும்ப மாட்டார்கள். எனவே இந்த தண்டனையை நீங்கள் அவர்களுக்கு வழங்கும்போது இனி தவறு செய்வதற்கு முன் பலமுறை யோசிப்பார்கள்.
பிடித்த கார்ட்ரூனை பார்க்க அனுமதிக்காதே!
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் வழக்கமாக்கிக் கொள்வார்கள். எனவே அதற்கு முன்னதாக தங்களது வீட்டு பாடங்களை சீக்கிரமாகவே முடித்து விடுவார்கள். சொல்லப்போனால், குழந்தைகள் சீக்கிரமாக படித்து முடிப்பதற்கும் முக்கிய காரணம் இதுதான். இத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்தால் அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். இப்படி நீங்கள் தண்டிப்பதன் மூலம் இனி உங்கள் குழந்தை தவறு செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பார்கள்.
சீக்கிரமே தூங்கச் சொல்லுங்கள்:
பொதுவாக குழந்தைகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனையை சமாளிக்க அவர்களை சரியான நேரத்தில் தூங்க வைப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்தால் அவர்களை உடனே தூங்கும் படி தண்டிக்கவும். இப்படி நீங்கள் செய்வது மூலம் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்திற்கு முன்கூட்டியே தூங்குவதால் அவர்களால் சீக்கிரமே தூங்க முடியாமல் போகும். இந்த தண்டனை அவர்கள் செய்த தவறை உணர வைக்கும் மற்றும் இனி அந்த தவறை அவர்கள் செய்யாமல் கவனமாக இருப்பார்கள்.