How to Protect Firecrackers: மழைக்காலம் தொடங்கி விட்டதால் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. ஈரப்பதத்தில் இருந்து பட்டாசுகளை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள் எனத் தீபாவளிப் பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து மகிழ்வது வழக்கம். ஆனால், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை பாதுகாப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலாகவே இருக்கும்.
ஏன் என்றால் காற்றில் உள்ள ஈரப்பதமோ அல்லது நேரடி மழையோ பட்டாசுகளை எளிதில் வீணடித்துவிடும். நனைந்த பட்டாசுகள் சரியாக வெடிக்காது என்பது ஒருபுறமிருக்க, அவற்றைச் சேமித்து வைக்கும் முறைகளில் நாம் செய்யும் சிறு தவறுகள் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். வாங்கிய வெடிகளை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
24
காற்றோட்டமில்லாத பிளாஸ்டிக் பெட்டிகள்
பட்டசுகளை வாங்கிய அட்டைப் பெட்டியிலிருந்து பிரிக்காமல் அப்படியே காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைப்பது முதல் படி. இப்படிச் செய்வதால் மழைத்துளிகள் நேரடியாகப் படுவது தடுக்கப்படும். சிறிய ரக மத்தாப்பு, சக்கரங்களை ஜிப்-லாக் கவர்களில் போட்டு வைக்கலாம். கவர்களைப் பயன்படுத்தும் முன்பு உள்ளே ஈரம் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
அதேபோல, இந்த கவர்களை ஒன்றோடு ஒன்று அழுத்தி வைப்பதோ, மேலே கனமான பொருட்களைத் தூக்கி வைப்பதோ கூடாது. அடைக்கப்பட்ட பெட்டியை எப்போதும் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். பெரிய பெட்டிகளுக்குள் ஈரப்பதத்தை உறிஞ்சும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளைப் போடலாம். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அவை நேரடியாக வெடிமருந்தின் மீது படக்கூடாது. குழந்தைகள் இதை எடுத்துத் தவறுதலாக வாயில் போட்டுவிடாமல் கண்காணிப்பது அவசியம்.
34
தரைப்பகுதியும் தார்ப்பாயும்
மழைக்காலங்களில் வீட்டின் தரை மற்றும் சுவர்களில் இயல்பாகவே குளிர்ச்சியும் ஈரமும் ஒட்டியிருக்கும். அதனால் வெடிப் பெட்டிகளை நேரடியாகத் தரையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பால்கனி, திறந்தவெளி, மழைநீர் தெறிக்கும் ஜன்னல் ஓரங்கள் போன்ற இடங்கள் நிச்சயம் பாதுகாப்பானவை அல்ல. பாதுகாப்பான அலமாரிகளில் வைக்கலாம் என்றாலும், எளிதில் கீழே விழும் விளிம்புகளில் அடுக்க வேண்டாம். வெளிப்புறங்களில் தார்ப்பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் கொண்டு மூடி வைக்கும்போது உள்ளே வெப்பம் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நேரடி வெயில் படும் இடங்களிலும் இவற்றை வைக்கக் கூடாது.
செய்தித்தாள்கள் ஈரத்தை உறிஞ்சும் என்றாலும், அவை எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மெழுகுவர்த்தி, சமையல் அடுப்பு, மின்சாதனங்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வெடிபொருட்களை வைக்கவே கூடாது. சேமித்து வைக்கும் இடத்தில் புகைப்பிடிப்பதோ, நெருப்பு மூட்டுவதோ அறவே கூடாது.
எதிர்பாராத விதமாகப் பட்டாசுகள் நனைந்துவிட்டால், அவற்றை மீண்டும் வெடிக்கச் செய்ய பலரும் தவறான முயற்சிகளில் இறங்குவார்கள். ஹேர் டிரையர், ஹீட்டர் அல்லது அடுப்பைப் பயன்படுத்தி அவற்றை உலர்த்த முயல்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். வெயிலில் காய வைப்பதும் பாதுகாப்பற்றது.
நனைந்த வெடிகளைப் பிரித்து உள்ளே இருக்கும் மருந்தைக் கைகளால் தொடுவதும் கூடாது. இப்படி வீணான பொருட்களைத் தனியாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட வேண்டும். பின்னர் தீயணைப்புத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவற்றை எப்படிப் பாதுகாப்பாகச் செயலிழக்க வைப்பது எனக் கேட்டுத் தெரிந்துகொள்வதே புத்திசாலித்தனம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மழைக்காலத்தில் தேவையான அளவு வெடிகளை மட்டும் வாங்குவது நல்லது. அவற்றை வாங்கிய உடனேயே குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.