
இந்தியர்களை பொறுத்தவரை எந்த உணவு சாப்பிட்டாலும், அவர்களுக்கு சோறு சமைத்து சாப்பிடும் போது தான் வயிறு நிறைந்த உணர்வே ஏற்படும். அந்த திருப்தியை வேறு எந்த உணவாலும் தர இயலாது. பொதுவாக இந்தியர்களால் சாதம் சாப்பிடாத நாள்களை கற்பனை கூட செய்ய முடிவதில்லை.
பெரும்பாலான இந்தியர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவாக சோறு தான் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் ஒரு முறை டிபன், இரண்டு முறை சோறு எடுத்து கொள்கின்றனர். ஆனால் இது உடலுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. எத்தனை வேளை உணவு சாப்பிடுவது ஆரோக்கியமானது என இங்கு காணலாம்.
உண்மையில் பண்டைய காலங்களில் மூன்று வேளை உணவு இருந்ததில்லை. 14 ஆம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியர்கள் காலை உணவை எடுத்து கொள்ளவில்லை. அன்றைய காலகட்டத்தில் மதிய நேரத்தில் தான் உணவு எடுத்து கொள்வார்களாம். இரவில் மிதமான உணவு. அவ்வளவு தான். இது ஆரம்பகாலத்தில் ஏற்றதாக இருந்தது. அப்போது மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர். இப்படி உண்பது அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
இதையும் படிங்க: மீன் சாப்பிடும் போது 'இந்த' உணவுகளை மட்டும் தவிர்க்கனும்!! மீறினால் சேதாரம் தான்!!
காலங்கள் உருண்டோட மக்கள் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கத் தொடங்கினர். தொழிற்சாலைகள், அலுவலகங்களில் வேலை செய்ய தொடங்கியதால் உணவுப் பழக்கமும் இப்போது மாறிவிட்டது. இப்படிதான் காலை உணவு படிப்படியாக வழக்கத்திற்கு வந்தது.
தொடக்க காலங்களில் காலை உணவு கடினமான வேலை செய்வோருக்கு ஆற்றலைக் கொடுத்தன. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வந்த பின்னர் தேநீர், காபி மற்றும் காலை உணவை கொஞ்சம் வசதி வாய்ந்தவர்களிடம் பிரபலப்படுத்தியது. மருத்துவ நிபுணர்கள், "கடினமான வேலை செய்யாமல் குறைந்தளவு செயல்படுபவர்களுக்கு சிறிய சிற்றுண்டியும், இரண்டு வேளை முக்கிய உணவுகளும் சரியாக இருக்கும்" என்கின்றனர். ஒவ்வொருவர் வாழ்க்கையை பொறுத்தும் இது மாறுபடுகிறது. அதிகமாக உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு வேளை உணவு போதுமானது. ஒருவேளை லேசான உணவை எடுத்து கொள்ளலாம்.
அடிக்கடி சாப்பிடுவதால் உங்களுடைய பசிக்கான அறிகுறிகள் மந்தமாகி அதிகப்படியான உணவு சாப்பிட தூண்டப்படும். அதிலும் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் தின்பண்டங்களை சாப்பிடுவதும் இதில் அடங்கும். இந்திய சூழலில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகள் தான் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன. இவை உங்களுடைய பசியை அதிகரிக்கும். இதனால் உடலுக்கு அதிக கலோரிகள் கிடைக்கும். இவை உடல் எடையை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: முட்டை சாப்பிடுவது ஆரோக்கியம்.. ஆனா இந்த '7' தவறுகள் மட்டும் செய்யாதீங்க!!
சைவ உணவில், பருப்பு, பால் பொருட்கள் தான் புரத உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாததால் பருப்பு வகைகளில் உள்ள புரதத்தை காட்டிலும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்கிறார்கள். ஒருவர் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து உள்ளிட்டவை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். வெறுமனே கார்போஹைட்ரேட்டை மட்டும் அதாவது சோறு அதிக அளவில் சாப்பிடுவதால் போதுமான ஊட்டச்சத்தை பெற முடியாது.
மருத்துவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று வேளை உணவை உண்ண சொல்கின்றனர். உணவு உண்பது 6 முதல் 8 மணி நேர இடைவெளியில் இருக்க வேண்டும். வழக்கமாக காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை சாப்பிடலாம். சூரியன் மறைந்த பின்னர் உணவைத் தவிர்ப்பது உங்களுடைய செரிமானம் நன்றாக இருக்கும். இரவு ஓய்வெடுக்கவும் உதவியாக இருக்கும். இப்படி உண்பது தான் ஆரோக்கியமாக இருக்கும்.