
ஒரு மனிதருக்கு உடை என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. இதனை பொறுத்து ஒரு மனிதனை மதிப்பிட முடியும். ஒருவரின் ஆளுமையை கூட அவருடைய ஆடைகள் காட்டிக் கொடுத்து விடும். அதனால் தான் ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். அதே சமயம் நாம் அணியும் ஆடைகள் காட்சிக்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது; அவை சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் உடைகள் பல விதமாக வந்துவிட்டன. நைலான், காட்டன், சில்க், ஜீன்ஸ், கார்கோ என பேண்ட் வகைகளே விதவிதமாக காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆடைகளும் ஒவ்வொரு விதமானது. அதை போல அவற்றை சுத்தம் செய்யும் முறையும் ஆடைக்கு ஏற்றபடி வேறுபடும்.
சில ஆடைகளை அடித்து துவைக்க கூடாது; சில ஆடைகளை ட்ரைவாஷ் மட்டுமே செய்ய வேண்டும். சிலவற்றை ஒருமுறை பயன்படுத்தியதும் துவைக்க வேண்டும். சில பேன்ட் வகையை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்திவிட்டு துவைத்தால் போதும். இப்படி ஒவ்வொரு ஆடைகளும் ஒவ்வொரு விதமானது.
தற்போதைய அவசர வாழ்க்கையில் இளைய சமுதாயத்தினருக்கு தங்களுடைய ஆடைகளை பொறுமையாக துவைத்து, வெயிலில் உலர வைத்து சுகாதாரமாக பயன்படுத்த நேரம் இருப்பதில்லை. அதிலும் நகரத்தில் இருப்போருக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை. எங்கிருந்து நாள்தோறும் துணியை துவைப்பது என்றாகிவிட்டது. இதன் காரணமாகவே ஆண்களில் பெரும்பாலானோர் ஜீன்ஸ் போன்ற அடர்த்தியான ஆடைகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.
இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட் பார்க்க அழகாக தெரியும். ஒரு ஜீன்ஸ் எடுத்தால் கூட போதும். பல சட்டைகளுக்கு ஒரே பேன்ட் வைத்து சமாளித்து கொள்ளலாம். செலவுகளை மிச்சம் செய்யும் சிக்கனமான உடை ஜீன்ஸ். இதனை மற்ற துணிகளை போல தினமும் துவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அதற்கென சில கட்டுபாடுகள் உள்ளன. அதுமட்டுமில்லை, எல்லா வகையான பேன்ட்களையும் எவ்வாறு துவைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: புது டிரஸ்ஸை துவைக்காமல் போடும் நபரா? அப்ப கண்டிப்பா 'இத' தெரிஞ்சுகோங்க!
நாம் பயன்படுத்தும் மேல் சட்டையை விட காற்சட்டைகள் (Pants) கொஞ்சம் அடர்த்தியானது. அதனாலே அதனை உடனடியாக துவைக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்ச நாள் பயன்படுத்திய பின்னர், தாமதமாக துவைக்கலாம். இப்படி துவைப்பது அந்த துணியின் தரம், வகையை பொறுத்து மாறுபடலாம். ஒருநபரின் தனிப்பட்ட சுத்தம் பேண்ட் துவைக்காமல் பயப்படுத்தும் போது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். அவர் ஒரே இடத்தில் இருப்பவரா? வேறு இடங்களுக்கு செல்பவரா என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
எத்தனை நாள்கள் 'ஜீன்ஸ் பேன்ட்' துவைக்காமல் பயன்படுத்தலாம்?
ஜீன்ஸ் பேன்ட் துவைக்காமல் போடும்போது காலநிலை, வெப்பநிலை மாற்றங்களை கவனிக்கவேண்டும். உங்களுக்கு அதிகமான வியர்வை வெளியேறினால் விரைவில் துவைக்கவேண்டும். அழுக்கு உங்களுடைய ஆடைகளில் அதிகமாக ஏற்படும் என்றால் தாமதிக்காமல் தினமும் ஆடைகளை துவைக்க பழகுங்கள்.
இதையும் படிங்க: உடம்பை ஃபிட் ஆக காட்டும் ஜீன்ஸ்; கரெக்டான ஜீன்ஸ் செலக்ட் செய்ய டிப்ஸ்!!
ஜீன்ஸ் பேன்ட் கழட்டி வைக்கும்போது அதனை உட்பக்கமாக எடுத்து உலரவிட வேண்டும். வியர்வை உலர்ந்த பின்னரே மறுமுறை அணிய வேண்டும். அலுவலக வேலையை மட்டும் பார்ப்பவர்கள் 3 முதல் நான்கு நாட்கள் கூட துணியை அணிந்துவிட்டு அதன் பின்னர் துவைக்கலாம். ஜீன்ஸ் அணிந்து நடைபயிற்சி, மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் 2 முதல் 3 நாட்கள் வரை ஜீன்ஸ் அணியலாம். பின்னர் துவைக்கலாம்.
தீவிர உடற்பயிற்சி, அதிகமான வேலைகள் இருக்கும்பட்சத்தில் 1 அல்லது 2 நாளில் துவைக்கவேண்டும். இதை தவிர்த்து அதிகமான வியர்வை வெளியேறினால் விரைவில் துவைக்க வேண்டும். எதேனும் கறைபடிந்தால் உடனடியாக துவைக்க வேண்டும். நாட்களை கடத்தக்கூடாது. மேலும் ஜீன்ஸ் அணிவதால் துவைக்கும் நேரம் மிச்சம் என்றாலும் அதனால் சில பக்கவிளைவுகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் இறுக்கமான ஜீன்ஸை அணிவதை தவிருங்கள். தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
மற்ற பேன்ட்கள்:
அலுவலகம் செல்லும் ஆண்கள் வசதியாக உணரும் லினன் பேன்ட் (linen pant) அடர்த்தி குறைவாக இருக்கும். இதனை 2 முறை அணிந்துவிட்டு துவைக்கலாம்.
காட்டன் பேன்ட் (Cotton Pant) சுருங்கும் தன்மை உடையது. இதனை 2 அல்லது 3 முறை அணிந்த பின்னர் துவைக்கலாம்.
பளபளப்பாக இருக்கும் பாலியஸ்டர் பேன்ட்களை 5 முதல் 7 பயன்பாட்டிற்கு பின்னர் துவைக்கலாம். இதனால் பேன்ட்டின் பளபளப்பு தன்மை பாதிக்காது.
கம்பளி பேன்ட் வகைகளை 5 முதல் 20 தடவை பயன்படுத்திய பின்னர் துவைக்கலாம். கூடுமானவரை துவைக்காமல் பயன்படுத்துவது நல்லது. இதனால் ஆடையின் தரம் மாறாது.
சில்க் துணிகளாலான உடைகள் கவனமாக துவைக்க வேண்டியது. அதன் மீதுள்ள அழுக்கை பாதுகாப்பாக நீக்க ட்ரை க்ளீனிங் தான் ஏற்றது.
கேன்வாஸ் பேன்ட் பராமரிப்பு கிட்டத்தட்ட ஜீன்ஸ் போன்றது தான். நீங்கள் பயன்படுத்தும் முறைக்கு ஏற்றவாறு துவைக்கலாம். தினமும் துவைக்க தேவையில்லை.
விளையாட்டு துறையில் உள்ளவர்கள் உபயோகம் செய்யும் ஜெர்சி பேன்ட் (Jersey) ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னும் துவைக்க வேண்டும். இதனை
கைகளால் துவைத்தால் அதனுடைய தரம், தோற்றம் அப்படியே இருக்கும்.
குறிப்பு:
ஒவ்வொருவருடைய உடலமைப்பும் ஒவ்வொரு மாதிரியானது. சிலருக்கு அதிகம் வியர்வை வெளியேறும். சிலருக்கு அவ்வளவாக வியர்வை இருக்காது. ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களும் மாறுபடும். ஆகவே உங்களுடைய உடலுக்கும், ஆடையின் பயன்பாட்டுக்கும் ஏற்றபடி நீங்கள் துவைப்பதை முடிவு செய்யலாம். அதிகப்படியான வியர்வையுடன் மீண்டும் மீண்டும் ஒரே பேண்ட் அணிவதால் தோல் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த ஆடையாக இருந்தாலும் சுத்தமாக அணிவது அவசியம்.