
தற்போதைய காலத்தில் மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், அதிக தூசி, மாசு, பெருகிவரும் நோய்கள் காரணமாக இளமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படுகிறது. எளிதில் முதுமை தோற்றம் வராமல் இருப்பதற்கு ஆயுர்வேதம் சில வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தின் படி முதுமை என்பது உடல் ரீதியான மாற்றம் மட்டுமல்ல மனம் மற்றும் ஆத்மாவின் நிலையையும் பொறுத்தது. சரியான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மன அமைதி, வழக்கமான உடல் பயிற்சிகள் மூலம் முதுமையின் அறிகுறிகளை தாமதப்படுத்தலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது. முதுமை தோற்றம் வராமல் தடுக்க உதவும் சில ஆயுர்வேத குறிப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும். இது மன அமைதியையும் ஆற்றலையும் அதிகரிக்கும். சூரிய உதயத்திற்கு சுமார் 1.5 மணி நேரத்திற்கு முன்பு எழும்போது உடல் கடிகாரம் சீராவதுடன், மனதிற்கு அமைதியும் தரும். காலையில் எழுந்தவுடன் உடலை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும். பின்னர் நாக்கில் உள்ள வெள்ளைப் பூச்சுகளை நீக்க வேண்டும். இது வாய் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்த இது உதவும். தினமும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் கொப்பளிப்பது பல் ஈறுகளை வலுப்படுத்துவதோடு வாய் துர்நாற்றத்தையும் போக்கும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசை மற்றும் எலும்புகளுக்கு பலம் சேர்க்கும். மேலும் இது சருமச் சுருக்கங்கள் வராமலும் தடுக்கும். முதுமை தோற்றத்தை தள்ளிப் போடுவதற்கு உணவுப் பழக்கம் மிக முக்கியம். சமச்சீரான உணவுகளை உண்ண வேண்டும். புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து ஆகியவை சம அளவில் உணவில் சேர்க்க வேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் துவர்ப்பு கொண்ட அறுசுவைகளும் உடலுக்கு அவசியம். அதே சமயம் புதிதாக சமைத்த உணவுகளையும், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையும் உண்ண வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அல்லது பழமையான உணவுகளை தவிர்க்க வேண்டும். வயிறு நிரம்பும் அளவிற்கு சாப்பிடாமல் முக்கால் பங்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.
மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், நெல்லிக்காய், அஸ்வகந்தா, திரிபலா போன்ற ஆயுர்வேத மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. சருமங்களில் சுருக்கங்கள் ஏற்படாமல் நெல்லிக்காய் தடுக்கிறது. அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. திரிபலா செரிமானத்தை மேம்படுத்தி குடல் இயக்கங்களை சீராக்கி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளும். சருமங்கள் சுருக்கம் அடையாமல் இருப்பதற்கு நீரேற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் தேவை. இது உடல் செல்களை பழுது பார்க்கவும், புத்துணர்ச்சி பெறவும் உதவும். இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை உறங்குவது ஆயுர்வேதத்தின் படி சிறந்தது. அதிக மன அழுத்தம் எளிமையில் முதுமை தோற்றத்தை கொண்டு வந்து விடும். எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா, தியானம், பிரணாயாமம், நடைபயிற்சி, பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். வைட்டமின் டி சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் டி ஐ பெறுவதற்கு சிறிது நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். சருமம் மிகவும் மென்மையானது. எனவே இரசாயனம் கலந்த பொருட்களை தவிர்த்து இயற்கையான பொருட்களை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை சருமத்தில் பூசுவது சரும வறட்சியை குறைத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது. நேர்மறை எண்ணங்கள் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கோபம், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளை விடுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இது ஆயுளை அதிகரிப்பதோடு, இளமையான தோற்றத்தையும் தரும். இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன்னர் உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஒவ்வொருவரின் உடல்நிலையும் வேறுபடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.