
உடலில் உள்ள கழிவுகளை வடிகட்ட சிறுநீரகங்கள் ஆதாரமாக உள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கவும் உதவுகின்றன. ஆனால் பரபரப்பான வாழ்க்கை முறையில் பலரும் சிறுநீரக ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், போதுமான நீர் உட்கொள்ளல் இல்லாமை சிறுநீரகங்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் சில உணவுகள் சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. நச்சுக்களை நீக்க, நீரேற்றத்தை ஆதரிக்க இந்த உணவுகளைச் சேர்ப்பது பலனளிக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.
வெள்ளரிக்காவில் உள்ள நீர்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் சிறந்தது. இது பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. நீரேற்றமாக உடலை வைத்தாலே சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தடுக்கப்படுகிறது. இயற்கையாகவே வெள்ளரிக்காய் நீரேற்றத்திற்கு உதவும். இதில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் சிறுநீரக செல்களை பாதுகாக்கின்றன. மன அழுத்தம், ஃப்ரீ ரேடிக்கல்களால் சிறுநீரகங்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
சிட்ரஸ் பழமான எலுமிச்சை உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் இரண்டுமே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சிட்ரிக் அமிலமானது சிறுநீரில் கால்சியத்துடன் கலந்து கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது. எலுமிச்சையும் சிறுநீரக செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து காக்கிறது. உடலுக்கு நீரேற்றத்துடன், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுகிறது.
கொத்தமல்லி தழை அல்லது பார்ஸ்லி/ வோக்கோசு உணவில் வாசனைக்காக போடப்படும். இயற்கையாகவே டையூரிடிக் போல செயல்பட்டு சிறுநீர் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் சிறுநீரக செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. மூலிகை தேநீரில் போட்டு குடிக்கலாம்.
அதிக உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். அதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது. பெண்கள் குறைந்தபட்சம் 2 1/2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 3 லிட்டர் அருந்த வேண்டும். மறக்காமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுநீரகங்களில் தொடர்வலி அசௌரியங்கள் ஏற்படும் போது கண்டிப்பாக மருத்துவரை அணுகி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உண்பது அவசியம்.