கொசுக்களை ஓட... ஓட விரட்டும் ஆயுர்வேத முறைகள்- ரசாயனம் வேண்டாமே ப்ளீஸ்..!!

First Published Sep 22, 2022, 11:05 AM IST

கொசுக்களால் ஏற்படும் பிரச்னை கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் உயிர் சங்கிலிக்கு கொசு பெரும் பங்காற்றுகிறது. அதனால் கொசுவை கட்டுப்படுத்தலாம் தவிர, அழிக்க முடியாது. பல்வேறு உயிர்களுக்கு அது உணவாக இருப்பதால், மனிதனின் உணவுச் சங்கிலியில் அது பிரதானமாக உள்ளது. அதனால் கொசுக்கள் அதிகரிப்பை தடுக்கவும், அதனால் பரவும் நோயை கட்டுப்படுத்தவும் பல்வேறு ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்துகிறோம். இது சொல்யூஷன், அட்டை மற்றும் பத்தி வடிவுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுபோன்ற கொசு மருந்துகள் சுற்றுச்சூழலையும் மனித உடலையும் பாதிப்பதாக பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மருந்துகளால் ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் கொசுவை விரட்டுவதற்கு சில இயற்கையான முறைகள் தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட இயற்கையான முறைகலை பின்பற்றுவதன் மூலம், சுற்றுப்புறச் சூழலுக்கும் உடல்நலத்துக்கு எந்தவித தீங்கும் ஏற்படுவது கிடையாது. இதை மிகவும் எளிய வழிமுறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
 

உப்பு, கடுகு மற்றும் வேப்பம் பூ

கடுகு, வேப்பம் பூ-வை சமமாக எடுத்து காயவைக்க வேண்டும். அவை சுக்காக காய்ந்தவுடன், மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும். அதையடுத்து ஒரு கரிக்கட்டையை எடுத்து தீயில் காட்டி தனலாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மண் கலயத்தில் கரிக்கட்டையைப் போட்டு, அதன்மீது அரைத்துவைத்த பொடியை தூவி மற்றும் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். அதன் வழியாக வரும் புகையை வீட்டுக்குள் அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும். ஜன்னல் ஓரம், இண்டு, இடுக்கு, மூளை, கட்டிலுக்கு அடியில், பீரோ ஓரத்தில் என அனைத்து பகுதிகளிலும் காட்ட வேண்டும். இதனால் வீட்டுக்குள் கொசு வருவது குறைந்துவிடும். இதேபோன்று தினமும் செய்துவந்தால் நாளிடைவில் கொசு வீட்டுக்குள் வரவே வராது.
 

தேவதாரு, எலுமிச்சை மற்றும் வேப்பம் எண்ணெய்

அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் தேவதாரு என்று கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் வேப்ப எண்ணெய்யை சமளவு எடுத்துக் கொள்ளுங்கள். இம்மூன்றையும் கலந்து ஒரு கலவையாக்கி விடுங்கள். இதை உங்களுடைய தோளில் தடவினால் எந்தவிதமான சரும நோயும் வராது, கொசுவும் அண்டாது. இதனுடன் துளசியையும் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோன்று தேங்காய் எண்ணெயில் துளசி சாற்றை கலந்து சருமத்தில் தடவினாலும், அது கொசு விரட்டியாக செயல்படும்.

கற்பூரம் மற்றும் தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் இரண்டு கற்பூரத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இதை வீட்டின் ஜன்னல் ஓரம், கதவோரங்களில் தடவலாம். அதன்மூலம் உருவாகும் நறுமணம் கொசுக்களை வீட்டுக்குள் விடாது. அதேபோன்று, பூஜை செய்யும் போது கற்பூரத்தை ஜூவாலை ஏற்றி, வீட்டின் நாலாப்புறங்களிலும் காட்டலாம். படுக்கை அறையிலும் இதை காட்டலாம். இதுவும் கொசுவை விரட்டி அடிக்கும். மேலும் கற்பூரத்தின் நறுமணம் தூக்க கோளாறுகளை போக்குவதற்கும் உதவுகிறது.
 

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

ஒரு சின்ன குப்பில் பேக்கிங் சோடாவை போட்டு வையுங்கள். அதன் மேல் பகுதியில் வினிகரை ஊற்றி அறைக்கு வெளியில் வையுங்கள். இது கொசுவை உள்ளே வரவிடாது. பேக்கிங் சோடா மற்றும் வினிகர் மூலம் ஏற்படும் எதிர்வினை காரணமாக கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இதனால் கவரப்படும் கொசுக்கள், பேக்கிங் சோடாவை தேடிப் போகும். அதனால் கொசு செத்துப் போகும். மாலை நேரங்களில் வரும் கொசுக்களை ஒழித்துக் கட்ட இது நல்ல முறையாக செயல்படும். 

எலுமிச்சைப் பழம் மற்றும் கிராம்பு

எலுமிச்சைப் பழத்தை பாதியாக நறுக்கி, அதில் 10 முதல் 15 கிராம்புகளை குத்த வேண்டும். இப்படி செய்து, கொசுக்களில் இருக்கும் இடங்களில் வைத்தால், கொசு உற்பத்தி தடுக்கப்படும். அதேபோன்று தேங்காய் எண்ணெயுடன் கிராம்பு எண்ணெயும் கலந்து வைத்தால், அதுவும் இயற்கையான கொசுவிரட்டியாக செயல்படும். அந்த எண்ணெய் கலவையை உடலிலும் தேய்க்கலாம்.

click me!