
வெந்நீர் குடிப்பது உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் புரியும். அதிலும் குளிர்காலங்களிலும், மழை காலங்களிலும் வெதுவெதுப்பான நீரை அருந்துவது இதமாகவும், குளிருக்கு ஆறுதலாகவும் இருக்கும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போதும் பூமியில் ஈரப்பதம் இருந்துவருகிறது. இதன் காரணமாக ஜில்லென்ற காற்று வீசுகிறது. இந்த மாதிரி நேரங்களில் வெதுவெதுப்பான நீர் உடலுக்கு இதம்.
தண்ணீரை வெதுவெதுப்பாக குடிப்பதால் செரிமானம் மேம்படுகிறது. நமது உடலில் உள்ள நச்சுகளை வெந்நீர் அகற்றும். சாதாரண நீருடன் ஒப்பிட்டால் வெந்நீரை அருந்துவது செரிமானத்தை துரிதமாக்கும். பொதுவாக நிபுணர்கள் வெதுவெதுப்பான நீரை அருந்துவது வளர்சிதையும் தூண்டுவதாக கூறுகின்றனர். உடல் எடையைக் குறைப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
இதையும் படிங்க: தேனும் வெந்நீரும் நல்லது தான்... ஆனா 'இவங்க' மட்டும் குடிக்கவே கூடாது!!
தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வெந்நீரை குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்போர் இதை செய்யலாம். ஆயினும் எல்லோருக்கும் வெதுவெதுப்பான நீர் நல்ல பலன்களை தருவதில்லை. வெந்நீர் சில சமயங்களில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும். யாரெல்லாம் வெந்நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இங்கு காணலாம்.
இதையும் படிங்க: வெறும் வெந்நீர்தானேனு நினைக்காதீங்க; 5 நோய்களை நீக்கும் அருமருந்தாம் அது!
வாய் புண்கள்:
வாய் புண் இருக்கும் நபர்கள் வெந்நீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெந்நீர் உங்களுடைய புண்களின் மீது பாதிப்பை உண்டாக்கும். இதனால் வலியும் அதிகமாகலாம். வாயில் உள்ள புண்கள் சீக்கிரம் ஆறாமல் போய்விடும். இது மாதிரியான சமயங்களில் சாதாரண தண்ணீர் அருந்தலாம்.
நீர்ச்சத்து குறைபாடு:
உங்களுக்கு நீர்ச்சத்து (Dehydration) குறைபாடு இருந்தால் வெந்நீர் குடிக்க வேண்டாம். வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும். உடலில் காணப்படும் தாதுக்கள் கூட நீங்கலாம். இதனால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு முன்பே நீரிழப்பு பிரச்சனை இருந்தால் வெந்நீர் குடிப்பதை தவிருங்கள். சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும்.
அமிலத்தன்மை கோளாறு:
அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரை குடிக்க வேண்டாம். இதனால் வயிற்றில் இருக்கும் அமில அளவை அதிகமாகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீர் குடிப்பதால் வயிறு எரிதல், புளித்த ஏப்பம், வாயு கோளாறுகள் வரலாம்.
வயிற்றுப் புண்:
வெந்நீர் குடிப்பது வயிற்று புண்களை மோசமாக்கும். இதனால் வலியும் ஏற்படலாம். அல்சர் மாதிரியான பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரை தவிர்ப்பது நலம். சாதாரண நீரை அருந்துவதால் வயிற்றுக்கு குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும்.
காய்ச்சல்:
தீவிர காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வெந்நீரை ஆறவைத்து அருந்தலாம். சூடாக குடிப்பது நல்லதல்ல. தீவிர காய்ச்சலில் ஏற்கனவே உடல் வெப்பமாக இருக்கும் என்பதால் ஆறிய வெந்நீரை அருந்தலாம்.
வெந்நீர் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கும். ஆனால் வெந்நீரை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்நீர் அதிகமாக அருந்தினால் தொண்டை, செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகள் வரலாம். தொடர்ந்து வெறும் வயிற்றில் வெந்நீர் எடுத்து கொள்பவர்கள் மருத்துவ பரிந்துரையை நாடுவது நல்லது.