
உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அன்றாட வாழ்க்கையில் நடைபயிற்சி, நடனம், ஓடுதல், பிற உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்வது உடலில் இயக்கத்தை மேம்படுத்தவும், தசைகளை வலுப்படுத்தவும், மன நலனை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது. பொதுவாக உடற்பயிற்சிகள் உடலை மெருகேற்ற உதவுமே தவிர, உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது. ஆனால் பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை தரும் நோயால் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரு இதய நிபுணரிடம் அது குறித்து கேட்கப்பட்டது. அந்த விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்படும் பயம் பொதுவாக பலருக்கும் இருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியது தான். ஏனென்றால் அதிக எடையை தூக்கும்போது உடலமைப்பில் அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதய அமைப்பிலும் அதிக அழுத்தம் உணரப்படுகிறது. உண்மையில் 'பளு தூக்குதல்' பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுடைய இதயம் ஆரோக்கியமாக மாறுகிறது. நீங்கள் சரியான எடையுடன், முறையாக பளு தூக்குதல் பயிற்சியை செய்யும்போது உங்களுக்கு நீங்கள் நினைத்து பார்க்காத நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதிக எடையை தூக்குவது சில நேரங்களில் பாதிப்பை தரலாம்.
இதையும் படிங்க: காபி குடித்தால் மாரடைப்பு வராதா? ஆய்வு சொல்லும் உண்மை!! எப்படி காபி குடிக்கலாம்?
பளு தூக்குதல் நன்மைகள்:
வெயிட் லிப்டிங் (weight lifting) என சொல்ல கூடிய பளு தூக்குதல் பயிற்சி செய்வதால் உங்களுடைய தசையின் வலிமை அதிகரிக்கிறது. தசைகளின் சகிப்புத்தன்மை மேம்படுகிறது. உங்களுடைய உடல் உறுதியாகி தோரணையில் (posture) மாற்றம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்யும்போது அவர்களுடைய மனநிலை முன்னேற்றம் காண்கிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் கார்டியோ பயிற்சிகளை மட்டும் செய்யாமல் எடைகளுடன் பயிற்சி செய்யும்போது உடலமைப்பில் நல்ல மாற்றம் தெரியும். விரைவில் தோற்றத்தில் மாற்றத்தை காண்பீர்கள்..
இதையும் படிங்க: இரவில் தொடர்ந்து 'மது' குடித்தால் மாரடைப்பு வருமா?
மாரடைப்பு ஏன் வருகிறது?
மாரடைப்பு முன்னறிவிப்பின்றி வரக்கூடிய நோயாகும். இதை முன்கூட்டியே தடுக்க மக்கள் விரும்புகின்றனர். ஆனால் முற்றிலுமாக மாரடைப்பை தவிர்க்க எந்த வழியும் இல்லை. அது வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். அதற்கு உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறையை சற்று மாற்றிக் கொள்ளலாம். அதிக எடையை நீங்கள் தூக்கி பயிற்சி செய்யும் போது இதய அமைப்பில் சற்று கடினமான உணர்வுகள் ஏற்படும். ஆனால் கவனமாக சரியான எடையுடன் பயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்திற்கு நன்மையைத்தான் செய்ய வாய்ப்புள்ளது.
பளு தூக்குதல் பயிற்சி செய்யும் போது உங்களுடைய இதய துடிப்பு அதிகமாகிறது. அப்போது உடலில் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இப்படியாக இதய ஆரோக்கியத்திற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது. இதனால் பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன. ஆனால் போதிய ஓய்வெடுக்காமல் பயிற்சி செய்வது, ஏற்கனவே ஏதேனும் மருத்துவ சிக்கல் இருக்கும் நபர்கள் தீவிரமாக பளு தூக்குதல் பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எப்போது ஆபத்து?
பளு தூக்குதல் பயிற்சியை செய்யும்போது உங்களுடைய இதய அமைப்பில் அதிக அழுத்தம் உணரப்படுவதை கவனிக்க வேண்டும். ஒரே நாளில் அதிக எடையை தூக்க கூடாது. புதிதாக இந்த பயிற்சியை செய்பவர்கள் படிப்படியாக எடையை அதிகரிக்க வேண்டும். தங்களுடைய திறனை மிஞ்சிய அளவிற்கு ஜிம் சென்றதும் எடைகளை தூக்கக்கூடாது. திடீரென உடலுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் உங்களை தள்ளலாம். நீங்கள் பயிற்சி செய்யும்போது சரியான தோரணையில் நின்று செய்ய வேண்டும். தவறான முறையில் செய்தால் இதயத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். கைகள், முதுகு பகுதிகளில் வலி ஏற்படலாம்.