AC Maintenance Tips: ஏசி கரண்ட் பில்லைக் குறைக்க அடிக்கடி ஆன், ஆஃப் செய்கிறீர்களா? கம்ப்ரசர் பழுதடைந்து கரண்ட் பில் எகிறும் அபாயம் உள்ளது. ஏசியை சரியாகப் பயன்படுத்தி மின் கட்டணத்தைக் குறைக்கும் எளிய பராமரிப்பு டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
ஜூலை மாதம் வந்து விட்டபோதிலும் தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. கொடுமையான இந்த வெயிலுக்கு ஏசி தான் பலருக்கும் ஒரே ஆறுதல். ஆனால், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று ஏசியை அடிக்கடி ஆன், ஆஃப் செய்யும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது உண்மையிலேயே மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறதா அல்லது ஏசியின் ஆயுளைக் குறைக்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
ஏசியை அடிக்கடி ஆஃப் செய்தால் கம்ப்ரசர் மீது நேரடித் தாக்குதல்
ஏசியின் இதயம் போன்ற பகுதி அதன் கம்ப்ரசர் தான். நீங்கள் ஏசியை ஆன் செய்தவுடன், அறையைக் குளிர்விக்க இந்த கம்ப்ரசர் முழு சக்தியுடன் இயங்கத் தொடங்குகிறது. இப்படி ஒவ்வொரு முறை தொடங்கும்போதும், அது வழக்கத்தை விட அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்; இது 'ஸ்டார்டிங் லோட்' எனப்படுகிறது. வெறும் 5 அல்லது 10 நிமிட இடைவெளியில் ஏசியை மீண்டும் மீண்டும் இயக்கினால், இந்த தொடர்ச்சியான ஸ்டார்டிங் லோட் கம்ப்ரசருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கும்.
இதனால் அதன் பாகங்கள் தேய்ந்து, செயல்திறன் குறைவதோடு, மின்தேக்கிகள் (capacitors) மற்றும் சர்க்யூட் போர்டு போன்றவையும் பழுதடைய வாய்ப்புள்ளது. இதுதான் பல நேரங்களில் ஏசி திடீரென நின்று போவதற்கும், சரியாக குளிர்விக்காமல் போவதற்கும் காரணமாக அமைகிறது.
ஏசியை அடிக்கடி ஆன், ஆஃப் செய்தால் மின்சாரம் மிச்சமாகும் என்பது ஒரு தவறான கருத்து. ஒவ்வொரு முறையும் ஏசி தொடங்கும்போதும் அதிக மின்சாரத்தை இழுப்பதால், உங்கள் மாதாந்திர மின் கட்டணம் குறைய வாய்ப்பில்லை, மாறாக அதிகரிக்கவே செய்யும். இது ஒருபுறம் இருக்க, அறை மீண்டும் சூடாகிவிடுவதால், அதை குளிர்விக்க ஏசி இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும்.
மேலும், இந்த பழக்கத்தால் ஏசியின் குளிரூட்டும் சுழற்சி (cooling cycle) பாதியிலேயே தடைபடுகிறது. இதனால், அறை முழுமையாகக் குளிர்வதற்கு முன்பே அதன் செயல்பாடு நின்றுவிடுவதால், "ஏசி கூலிங்கே ஆகவில்லை" என்ற உணர்வு ஏற்படும். உண்மையில், இயந்திரத்தில் கோளாறு இல்லாமல், நாம் பயன்படுத்தும் முறையில் தான் சிக்கல் இருக்கும்.
இன்றைய நவீன இன்வெர்ட்டர் ஏசிகள், அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப கம்ப்ரசரின் வேகத்தை தானாகவே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை. அதனால், அவற்றை அடிக்கடி ஆன், ஆஃப் செய்யத் தேவையில்லை. ஆனால், நான்-இன்வெர்ட்டர் ஏசிகளைப் பயன்படுத்துவோர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவற்றின் கம்ப்ரசர் எப்போதும் முழு வேகத்தில் மட்டுமே இயங்கும். ஏசியை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது. இது மின்சாரத்தையும் சேமிக்கும், உடலுக்கும் இதமாக இருக்கும்.
55
ஏசியை ஆஃப் செய்வதற்கு பதிலாக இதை செய்யுங்கள்
குளிர் அதிகமாக உணர்ந்தால், வெப்பநிலையைச் சற்று உயர்த்தலாமே தவிர, ஏசியை அணைக்க வேண்டாம். இரவு நேரங்களில் 'ஸ்லீப் மோடு' பயன்படுத்துவது மிகச் சிறந்த பழக்கம். அறையின் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பதும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஏசி ஃபில்டரை சுத்தம் செய்வதும் அதன் செயல்திறனைப் பெரிதும் மேம்படுத்தும்.
வருடத்திற்கு ஒருமுறை நிபுணர் மூலம் சர்வீஸ் செய்வது, பெரிய பழுதுகள் வராமல் தடுக்கும். மின்தடைக்குப் பிறகு, உடனடியாக ஏசியை ஆன் செய்யாமல், 3-5 நிமிடங்கள் காத்திருப்பது கம்ப்ரசரின் ஆயுளைக் கூட்டும். சுருக்கமாகச் சொன்னால், ஏசியை அடிக்கடி ஆன், ஆஃப் செய்வது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சரியான வெப்பநிலையை செட் செய்து, சீராக இயங்க விடுவதே மின்சாரத்தை சேமிக்கவும், ஏசியை நீண்ட காலம் பயன்படுத்தவும் சிறந்த வழியாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.