
வியர்வை என்பது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆகும். வியர்வை இயற்கையாக வாசனையற்றது. ஆனால் நம் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையுடன் கலந்து செயல்படும்பொழுது துர்நாற்றம் உருவாகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் பல வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். சந்தைகளில் டியோடரண்டு, பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம் என பல விதங்களில் வாசனை திரவியங்கள் கிடைக்கின்றன. ஆனால் இதன் அடிப்படை வித்தியாசம் தெரியாமல் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த பதிவில் டியோடரண்டு மற்றும் வாசனை திரவியங்கள் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக டியோடரண்டுகள் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க அல்லது செயல்பாட்டை குறைக்க உதவுகின்றன. வியர்வை வெளியேறி சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் டியோடரண்டுகளில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் ஏஜென்ட்கள் துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டது. சில டியோடரண்டுகளில் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் இவை அலுமினிய உப்புக்களை கொண்டுள்ளன. இது வியர்வை சுரப்பிகளை தற்காலிகமாக அடைத்து, வியர்வை உற்பத்தியை குறைக்கின்றன. இதில் லேசான வாசனை மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும். இது துர்நாற்றத்தை போக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும்.
டியோடரண்டுகள் பொதுவாக ரோல் ஆன் வடிவில் சந்தைகளில் கிடைக்கிறது. அக்குள் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மட்டுமே செயல்படும். இதில் ஆல்கஹால் இல்லை என்பதால் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதில் வாசனை செறிவு குறைவு என்பதால் நீண்ட நேரம் நீடிக்காது. அதிகமாக வியர்ப்பவர்கள், வியர்வை துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்களுக்கு இது உதவாது. அதே சமயம் சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள், அலர்ஜி, தும்மல் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்கள், பர்ஃபியூம் அடித்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படும் என்பவர்களுக்கு டியோடரண்டுகள் பாதுகாப்பானது. மறுபுறம் பர்ஃபியூம்கள் என்பது உடலுக்கு ஒரு இனிமையான வாசனையை அளிக்கும் ஒரு திரவியம் ஆகும். இவை வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதில்லை.
பர்ஃபியூம்களில் அத்தியாவசிய எண்ணைகள், நறுமணச் சேர்மங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை கலந்துள்ளன. இதில் இருக்கும் ஆல்கஹால் விரைவில் ஆவியாகி அத்தியாவசிய எண்ணெய்களின் நறுமணத்தை சருமத்தில் விட்டு செல்கிறது. இதில் நறுமண எண்ணைகள் அதிக செறிவுடன் இருப்பதால் தீவிரமான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் வாசனையை கொண்டிருக்கிறது. நாடித்துடிப்பு உள்ள இடங்களான மணிக்கட்டுகள், கழுத்து, காதுகளுக்கு பின்னால் உள்ளிட்ட பகுதிகளில் பர்ஃபியூம்களை பயன்படுத்த வேண்டும். இதில் நறுமணப் பொருட்களின் செறிவு அதிகமாக இருப்பதால் 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிகின்றன. சில விலை அதிகமான பர்ஃபியூம்கள் 24 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
பொதுவாக டியோடரண்டு மட்டும் பர்ஃபியூம்கள் ஆகிய இரண்டுமே சரியான முறையில் பயன்படுத்தும் பொழுது பாதுகாப்பானது. இரண்டிலும் சரும எரிச்சல், அரிப்பு, ஒவ்வாமை ஆகியவை ஏற்படலாம். அதிக உணர்திறன் கொண்ட சருமம் உள்ளவர்கள் ஆல்கஹால் இல்லாத தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். அலுமினியம் கலவைகள் சிலருக்கு மார்பக புற்றுநோய் மற்றும் அல்சைமர் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் இதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் அலுமினியம் இல்லாத டியோடரண்டுகளை பயன்படுத்தலாம் பர்ஃபியூம்களில் இருக்கும் சில பித்தலேட்டுகள் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழி வகுக்கலாம். வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தும் பொழுது நேரடியான தலைவலி, சுவாசப் பிரச்சனைகள் அல்லது ஒவ்வாமைகளுக்கு வழி வகுக்கலாம்.
டியோடரண்டுகள் மற்றும் பர்ஃபியூம்கள் இரண்டுமே வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றன. துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் டியோடரண்டுகள் சிறந்தவை. அதே சமயம் உங்களுக்கென ஒரு தனி நறுமணத்தை உருவாக்க விரும்பினால் அல்லது விசேஷங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு செல்லும் பொழுது பர்ஃபியூம்கள் அணிந்து கொள்ளலாம். இரண்டுமே பாதுகாப்பானது என்ற போதிலும் சரும வகையைப் பொறுத்தும், பிராண்டுகளின் தயாரிப்புகளை பொறுத்தும், பக்கவிளைவுகள் ஏற்படலாம். பக்க விளைவுகளானது நபருக்கு நபர் வேறுபடலாம். ஒவ்வாமை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு தோல் நோய் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.