
இன்றைய காலத்தில் இளநரை என்பது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாக உள்ளது. தற்போது குழந்தைகளிடம் கூட இந்த பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. அதிக மன அழுத்தம், பித்தம் அதிகரிப்பு, உடலில் வெப்பம் அதிகரிப்பு, ஹீமோகுளோபின் குறைவு ஆகிய காரணங்களால் இளநரைப் பிரச்சனை ஏற்படுகிறது. இளம் வயதில் ஏற்படும் நரைமுடியை நாம் எளிதில் சரி செய்து விட முடியும். இதற்கு சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் உள்ளன. இளநரையை தடுக்க வெளிப்பூச்சுகள் மட்டுமல்லாமல், கல்லீரலையும் நாம் கவனிக்க வேண்டும். கூந்தலை பராமரிக்கவும், இளநரையை சரி செய்யவும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள சில தீர்வுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இளநரை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக பித்த நீர் அதிகரிப்பு உள்ளது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது பித்த நீர் அதிகமாக சுரக்கிறது. இது நரைமுடிக்கு முக்கிய காரணமாகும். மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை அதிகரிக்கும் பொழுதும் உடலில் பித்த நீர் அதிகமாக சுரக்கிறது. பித்தம் அதிகரித்தால் இளநரை மட்டுமல்லாமல் சரும வறட்சி, கால்களில் வெடிப்பு, குமட்மல், வாந்தி, அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை பாதித்து உடல் உஷ்ணத்தை அதிகரிக்கலாம். இதன் காரணமாகவும் நரைமுடி பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே முதலில் மன அழுத்தம், மனசோர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும். உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது தலைமுடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சனை ஏற்படுகிறது. புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து நரை முடி பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உப்பு மற்றும் புளிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு இளநீர் குடிப்பது, வாரத்திற்கு இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இளநரையை சரி செய்வதற்கு வெளி பூச்சுகளை விட உடலில் உள்ளிருந்து சில மருத்துவங்களை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக கல்லீரலை பலப்படுத்துவது அவசியம்.
கல்லீரல் பித்த நீரை சுரப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள் மற்றும் மருந்துகளை உட்கொள்வது பித்தத்தை சமநிலைப்படுத்தி நரைமுடி பிரச்சனையை சரி செய்ய உதவும். கல்லீரலை பாதுகாப்பதற்கு பல்வேறு மூலிகைகள் மற்றும் மருந்துகள் உள்ளன. குறிப்பாக நாட்டு மாதுளை கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் காலை சுமார் 100 முதல் 150 மில்லி வரை நாட்டு மாதுளம் பழத்தின் சாறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் குணமாகும். இளநரையும் சரியாகும். அதே போல் கரிசலாங்கண்ணி கல்லீரலை பலப்படுத்தும் கீரைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கரிசலாங்கண்ணி பொடியை தினமும் காலை வெறும் வயிற்றில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. கல்லீரலும் சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் பித்தம் தொடர்பான நோய்கள் குணமாகிறது.
இந்த உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுகளையும் மேற்கொள்ள வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து லேசாக சூடு படுத்த வேண்டும். கை பொறுக்கும் அளவிற்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு இவற்றை விரல்களால் தொட்டு வேர்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இது இளநரை பிரச்சனையை படிப்படியாக குறைக்கும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி வரலாம். நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக தான்றிக்காய் பொடியையும் தேங்காய் எண்ணெயில் பயன்படுத்தலாம். தான்றிக்காய் கூந்தல் வேர்களை பலப்படுத்துகிறது. பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை தருகிறது. முடி உதிர்வையும் குறைக்கிறது. இந்த எண்ணெய்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு : இந்த வழிமுறைகளை பின்பற்றி வருபவர்களுக்கு இளம் வயதில் ஏற்படும் இளநரை பிரச்சனையை குறைக்க முடியும். சந்தைகளில் கிடைக்கும் கெமிக்கல் ஹேர் டைகளை தவிர்த்து இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஹேர் டைகளை பயன்படுத்தலாம். இளநரை ஏற்படுவதற்கு மன அழுத்தம் முக்கிய பிரச்சனையாக விளங்குகிறது. எனவே மனம் அழுத்தம் இல்லாத வாழ்க்கை, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவை இளநரையை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி பிரச்சனைகளுக்கு வெளி பூச்சிகளை மட்டும் நம்பக்கூடாது. உடலின் உள்ளே இருக்கும் கல்லீரல், இரத்த ஓட்டம், மனம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதன் மூலமாக முடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சனைகளை சரி செய்யலாம்.