
குழந்தைகள் எப்போதும் சாப்பாட்டை கண்டால் ஓடுவார்கள். அவர்களை சாப்பிட வைப்பதே பெரும்பாடு. நிலாவை காட்டி சோறூட்டிய காலம் மலையேறி மொபைலை காட்டி உணவு ஊட்டும் காலம் வந்துவிட்டது. ஆனால் குழந்தைகள் சாப்பாட்டை கண்டால் ஓடுவது மட்டும் எல்லா காலத்திலும் மாறாமல் உள்ளது.
அதைப் போலவே சாப்பாட்டின் தரமும் இன்றைய காலகட்டத்தில் மாறிவிட்டது. துரிதமாக சமைக்கும் உணவுகளே இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. குழந்தைகள் எப்போதும் விதவிதமாக சாப்பிட தான் விரும்புவார்கள். அவர்களுக்கு வண்ணமயமாக இருக்கும் உணவுகள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும்.
நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ் போன்றவற்றை பார்க்கும்போது குழந்தைகளுக்கு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது. அதை வாங்கி உண்ண ஆசைப்படுவார்கள். சில பெற்றோர் குழந்தைகள் அடம் பிடிப்பதால் அவர்களுக்கு இரவு நேரங்களில் கூட நூடுல்ஸ் ஃபிரைட் ரைஸ் போன்றவை வாங்கி கொடுப்பார்கள். சிலர் வீடுகளிலும் இதனை தயார் செய்வார்கள். ஆனால் இதுபோன்ற துரித உணவுகள் குழந்தைகளுக்கு அந்த அளவுக்கு நல்ல பலன்களை கொடுப்பதில்லை.
அப்படி கொடுப்பதால் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகள் தெரிந்து கொள்வதில்லை.அவர்களுக்கு மோசமான உணவுப் பழக்கத்தை பெற்றோரே ஏற்படுத்திவிடுகிறார்கள். துரித உணவுகளால் குழந்தைகளுக்கு என்னென்ன உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, ஏன் அவர்கள் இரவில் துரித உணவை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
துரித உணவுகளில் சுவையை கூட்ட எம்.எஸ்.ஜி (MSG) எனும் மோனோ சோடியம் குளூட்டாமேட் உப்பு கலக்கப்படுகிறது. இந்த உப்பு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இளம்வயதினர், வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் இந்த உப்பு கலந்த துரித உணவை உண்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை உண்ணும் போது தலை வலி, வயிறு வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் வரலாம். குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் குழந்தைகள் துரித உணவை உண்பதால் விஷ உணவாக (புட் பாய்சன்) மாறவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் ஆசைக்காக பகலில் கொஞ்சமாக வாங்கி என்றாவது ஒருநாள் கொடுக்கலாம். ஆனால் தொடர்ந்து கொடுக்கக் கூடாது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படும்.
தூக்கம் கலையும்:
இரவில் உறங்க செல்லும் முன்பாக செரிப்பதற்கு கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆனால் நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ் எண்ணெய் மக்கு உள்ள காரமான உணவாகும். செரிமானத்தையும் கடினமாக்கும். கடைகளில் வாங்கும் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் மோசமான தூக்கத்தை கொடுக்கும். அஜீரணம், அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
செரிமானம் பாதிப்பு:
துரித உணவுகளில் சில்லி சாஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உப்பு, சர்க்கரை அதிகமாக இருக்கும். இது குழந்தைகளின் எளிய செரிமான அமைப்புகளுக்கு ஏற்றதல்ல. இரவில் செரிமானம் கடினமாக இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு:
குழந்தைகளுக்கு சம அளவில் எல்லா சத்துக்களும் கிடைக்க வேண்டும். ஆனால் இரவில் துரித உணவுகளக் கொடுப்பது ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கும். துரித உணவுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை. அதை வழக்கமாக சாப்பிடுவது அதிலும் இரவில் உண்பது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: மக்கு குழந்தையை படிக்க வைப்பது எப்படி? இதோ டிப்ஸ்!!
உடல் பருமன்:
துரித உணவுகள் அதிக கலோரி கொண்டவை. அதில் அதிகளவு கொழுப்பும் காணப்படுகிறது. இரவில் அ அவற்றை உண்பதால் குழந்தைகளின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக உடல் எடையுடன் இருப்பது குறைந்த வயதில் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பல் ஆரோக்கியம்:
துரித உணவுகளில் அதிகளவு சர்க்கரை காணப்படுகிறது. அவை வாய் சுகாதாரத்தை பாதிக்கும். துரித உணவுகளை சாப்பிட்ட பின்னர் முறையாக வாய்வழி சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பற்சிதைவு உள்ளிட்ட பல் சுகாதார பிரச்சினைகள் ஏற்பசும்.
காலை உணவு:
காலையில் கட்டாயம் சத்தான உணவை குழந்தைகள் சாப்பிட வேண்டும். அதுவே அவர்களை சுறுசுறுப்பாக இயங்க செய்யும். ஆனால் குழந்தைகள் இரவில் துரித உணவுகளை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வில் இருப்பார்கள். காலையில் பசி எடுக்காது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான காலை நேர ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.
இரவில் கொடுக்க வேண்டிய உணவுகள்:
எல்லா சத்துக்களும் கலந்துள்ள சமச்சீர் உணவை கொடுக்கலாம். காலையில் சிற்றுண்டிகளுடன் பழங்கள் அல்லது காய்கறிகளை சேர்த்து கொடுக்கலாம். காலையில் உலர் பழங்களை கொண்டு ஸ்மூத்தி செய்து கொடுக்கலாம். இரவில் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் எப்போதும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தூங்கும் முன்பாக செல்போன் அல்லது டிவி பார்ப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். படுக்கைக்கு செல்ல 30 நிமிடங்கள் முன்பாக எந்த திரையும் பார்க்கக் கூடாது. சரியான நேரத்தில் ஓய்வெடுக்கும் உறக்க நேர வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: மூர்க்கமாக கோபப்படும் டீன்ஏஜ் பசங்க கிட்ட 'இப்படி' தான் பேசனும்!!