
அந்த காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும் என்று நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நடைமுறையானது நம்முடைய பாட்டி காலத்தில் இருந்தே இருக்கிறது.
மேலும் சிலர் வெயிலில் வைத்தால் குழந்தை கருப்பாக்கி விடும் என்றும், சருமத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்றும் பயந்து தங்கள் குழந்தையை வெயிலில் காட்ட தயங்குவார்கள். ஆனால் உண்மையில், புதிதாக பிறந்த குழந்தைக்கு சூரிய ஒளி ரொம்பவே முக்கியம். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் சூரிய ஒளி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது இது நம் அனைவருக்கும் அறிந்தது.
புதிதாக பிறந்த குழந்தையை சூரிய ஒளியில் வைப்பது நல்லது என்றாலும், எவ்வளவு நேரம் வைக்க வேண்டும் என்பதும் முக்கியம். இல்லையெனில் பிரச்சனையாகிவிடும். எனவே குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை காலை சூரிய ஒளியில் காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் எவ்வளவு நேரம் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!
குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதில் கிடைக்கும் நன்மைகள்:
1. எலும்புகள் வலுவாகும் : புதிதாக பிறந்த குழந்தையை குளிர்காலத்தில் காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்கும் போது அவர்களுடைய எலும்புகள் வலுவடையும். ஏனெனில், சூரிய ஒளி வைட்டமின் டி-யின் ஆதாரமாகும். எனவே இது அவர்களின் உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதுவும் குறிப்பாக குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும். எனவே அத்தகைய குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவது ரொம்பவே நல்லது.
2. மூளை வளர்ச்சி அடையும்: புதிதாகப் பிறந்த குழந்தையை சிறிது நேரம் சூரிய ஒளியில் காட்டும்போது, அவர்களின் மூளை வளர்ச்சி அடைவதற்கு உதவுகிறது. அதாவது குழந்தையின் மூளையில் செரோட்டோனெர்ஜிக் செயல்பாட்டை அதிகரிக்கும். இது அவர்களின் ஹார்மோன் மனநிலையை சீராக வேலை செய்ய உதவுகிறது.
3. மஞ்சள் காமாலை வராது: சூரிய ஒளியில் புதிதாக பிறந்த குழந்தையை சிறிது நேரம் வைக்கும் போது மஞ்சள் காமாலை நோய் குழந்தைக்கு வராமல் தடுக்க உதவுகிறது.
சூரிய ஒளியில் குழந்தையை எவ்வளவு நேரம் காட்ட வேண்டும்?
குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை காலை 9 முதல் 11 மணிக்குள் தான் காட்ட வேண்டும். அதுவும் குறிப்பாக, குழந்தையை 15 முதல் 30 நிமிடங்கள் வரை தான் சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதுவே குழந்தைக்கு போதுமானது. அதற்கு மேல் வைக்க வேண்டாம்.
அதிக சூரிய ஒளியின் பக்க விளைவு:
குழந்தையை அதிக நேரம் சூரிய ஒளியில் வைக்கும் போது அவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் சில சமயங்களில் தோல் கருமையாகும். அதிகப்படியான சூரிய ஒளியால் குழந்தையின் கண் பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: Parenting Tips : பிறந்த குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வந்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க நின்றுவிடும்!
முக்கிய குறிப்பு :
- குழந்தையின் தோள் ரொம்பவே சென்சிடிவ் ஆனது என்பதால் அவர்களின் தோல் சிவந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- அதுபோல சூரிய ஒளியால் குழந்தைக்கு நீர் இழப்பு ஏற்படாமல் இருக்க தாய்ப்பால் கொடுங்கள்.
- குழந்தையை சூரிய ஒளியில் வைக்கும் போது சூரிய ஒளி குழந்தையின் கண் மற்றும் முகத்தில் நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- குழந்தையை சூரிய ஒளியில் காட்டும் முன் சூரிய ஒளி குழந்தையின் சருமத்தை பாதிக்காதப்படி அதற்கேற்ற ஆடைகளை அணிவிக்கவும்.
- மேலும் காற்று வேகமாக வீசினால் குழந்தையை சூரிய ஒளியில் காட்ட வேண்டாம்.