தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லையா.? இதோ சூப்பரான 7 டிப்ஸ்!

First Published Dec 19, 2022, 4:56 PM IST

ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேர்வுக்கு தயாராகும் போது மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது மாணவர்களின் தேர்வு பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.

தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சரியான வழிமுறைகளை பின்பற்றினாலே மன அழுத்தத்தில் இருந்து வெளியேற முடியும். நீங்கள் அமைக்கக்கூடிய இலக்குகள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். அவை அடையக்கூடியதாகவும், நேரத்திற்கு கட்டுப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனவே எப்போது தயாரிப்பை தொடங்க வேண்டும் என்பதையும், தனிப்படுத்தப்பட்ட குறிப்புகளைத் தயாரிக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

படித்து படித்து மனமும், உடலும் சோர்வடைந்திருக்கும் நேரத்தில் தேர்வுகளுக்கு செல்லும் போது இரண்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம் ஆகும். இதற்கு எளிதாக உதவுகின்றது மிதமான ஒர்கவுட்கள் அல்லது உடல் செயல்பாடுகள். இவற்றை நீங்கள் வீட்டிலே செய்யலாம். இதன் மூலம் நீங்கள் மூளைக்கு மட்டுமல்ல, உடலுக்கும் ரீசார்ஜ் செய்ததை போல உணரலாம்.

தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே அதிக நேரம் படிப்பதில் மாணவர்கள் தங்கள் நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேபோல வீட்டில் இருப்பதும் சில நேரங்களில் மாணவர்களின் மனதில் வெறுமையை உண்டாக்கலாம். எனவே வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களை சந்திப்பது,அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்று நேரம் செலவிடுவது போன்றவைகளையும் மேற்கொள்ளலாம்.

உங்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும் ஆழ்ந்த சுவாசமும், தசைகளை தளர்த்தி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க தியானமும் கைகொடுக்கும். தேர்வில் தோற்றுவிடுவோமோ, மதிப்பெண்கள் குறைந்து விடுமோ போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் உருவாகும் போது, தியானம் செய்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளலாம்.

தேர்வு பயத்தை போக்க உடற்பயிற்சிகள் எப்படி முக்கியமோ அதே போல நன்றாக சாப்பிடுவதும் இரவு போதுமான தூக்கத்தை பெறுவதும் முக்கியம். இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் ஏற்கனவே உடல் மோசமாகும் நிலையில், சரியாக சாப்பிடாமல் இருந்தால் அது தேர்வு நேரத்தில் உற்சாகத்தை வெகுவாக குறைக்கும்.

மன அழுத்தத்தை உணரும் போது, பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள, பயிற்சியாளர்கள் ஆகியோருடன் நமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது முக்கியமாகும். இது உங்கள் மனதில் இருந்து அழுத்தத்தைத் தணித்து மகிழ்ச்சியான எண்ணங்களுக்கு உருவாக்க உதவும்.

அதேபோல தேர்வுக்கு முந்தைய நாள் அல்லது தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு மிகவும் மன அழுத்தமாகவும், பதற்றத்தையும் உணர்ந்தால் இசையைக் கேட்பது. விளையாடுவது, வாக்கிங் செல்வது போன்றவற்றை மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

click me!