
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய சிறுவயது அனுபவம் அவர்களுடைய எதிர்கால நடத்தையில் பிரதிபலிக்க கூடும். பெற்றோர் தங்களுடைய அணுகுமுறையில் கவனமாக இருப்பதற்கு இது ஒரு அவசியமான காரணமாகும். குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெற்றோர் தங்களுடைய நடத்தையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடைய ஆளுமை குழந்தைகளிடத்தில் பிரதிபலிக்கும். பெற்றோரை முன்மாதிரியாகக் கொண்டுதான் குழந்தைகள் வளருவார்கள். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு, கல்வி உடை போன்றவற்றை கொடுப்பது மட்டும் பெற்றோரின் கடமை கிடையாது. அதைத் தாண்டி அவர்களுடைய நடத்தையை முறையாக கவனிப்பதும் மாற்றுவதும் பெற்றோரின் கடமையாகும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பெற்றோர் செய்யவே கூடாத ஐந்து தவறுகளை இந்த பதிவில் காணலாம்.
எல்லா பெற்றோருமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் வித்தியாசமான முறைகளில் தங்களுடைய குழந்தைகளை வளர்கிறார்கள். கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க விதிமுறைகளை பழக்கப்படுத்துகின்றனர். மென்மையான பெற்றோர் குழந்தைகளுடைய போக்கிலேயே அவர்களை திருத்தி வழிநடத்து முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவம் மற்றும் அவர்களுக்கு தெரிந்த தகவல்களின் மூலம் குழந்தைகளை வழி நடத்துகிறார்கள். ஆனால் பெற்றோருடைய சில நடத்தைகள் குழந்தைகளுக்கு கெடுதலாக அமையும். குழந்தை வளர்ப்பு முறையில் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை, இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளை மனதளவில் வலிமையாக மாத்தனுமா? சூப்பர் பெற்றோருக்கு '5' டிப்ஸ்
கண்டிப்பும் மென்மையும்!
கண்டிப்பும், மென்மையும் ஒருசேர பெற்றோரிடத்தில் இருக்க வேண்டிய குணங்களாகும். பெற்றோரில் இருவருமே குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் கண்டிப்பாக நடந்து கொண்டால் மற்றொருவர் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் மென்மையான பெற்றோராக இருக்க வேண்டும். பெற்றோரின் இந்த நடத்தை குழந்தைகளுக்கு சமநிலையை அளிக்கிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் பெற்றோர் ஒரு டீம் போல செயல்பட வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் கண்டிப்பாகவும், மென்மையாகவும் நடப்பதில் தங்களுடைய பணிகளை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி புரிதலை பெற்றோருக்குள் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருவரும் கண்டிப்புடன் அல்லது இருவரும் மென்மையான பெற்றோராக இருக்கும்போது குழந்தைகளுக்கு சில பொறுப்புகளை கற்பிக்க முடியாமல் போய்விடும்.
அந்நிய நடத்தை:
குழந்தைகளுடைய கேள்விகள், அவர்களுடைய தேவைகள் போன்றவற்றை பெற்றோர் தொடர்ந்து நிராகரித்தால் அல்லது நிறைவேற்றாமல் தவிர்த்தால் அவர்களை அந்நியப்படுத்தும் பெற்றோர் என சொல்கிறார்கள். இந்த பெற்றோர் குழந்தைகளுக்கு எதையும் செய்யாமல் இருப்பார்கள். பெற்றோரின் இந்த பொறுப்பற்ற நடத்தை குழந்தைகளை தனிமையிலும் ஏக்கத்திலும் தள்ளிவிடும்.
ஹெலிகாப்டர்' வளர்ப்பு முறை:
ஹெலிகாப்டர் பேரன்டிங் (Helicopter Parenting) என்பது குழந்தை வளர்ப்பு முறையில் ஒன்று. இந்த வளர்ப்பு முறையில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அதிகமாக கவனம் செலுத்துவார்கள். இதனால் அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் நுண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக அதிகமாக செலவு செய்வது, அதற்காக கடன் வாங்குவது என குழந்தைகளை சுற்றியே அவர்களுடைய உலகம் இயங்கும். இதனால் குழந்தைகள் நல்லபடியாக வளருவார்கள் என பெற்றோர் நம்புகின்றனர். இது எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான விளைவுகளை கொடுக்கும் என சொல்லி விட முடியாது. குழந்தைகளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருப்பதால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
ரட்சக மனப்பான்மை கொண்ட பெற்றோர்:
ஹெலிகாப்டர் பெற்றோர் போலவே இரட்சக மனப்பான்மையுள்ள பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே தீங்கு செய்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எந்த தவறும் செய்யக்கூடாது என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வதால் அவர்கள் குழந்தைகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைத்து விடுகிறார்கள். குழந்தைகளின் அனைத்து வேலைகளையும் பெற்றோரே முடித்து விடுவதால் குழந்தைகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளும் திறன் இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது.
தண்டனை அளித்தல்:
குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு கூட உடனே தண்டனை வழங்கும் போக்கு பெற்றோரிடத்தில் காணப்பட்டால் அது தவறாகும். இந்த மாதிரியான பழக்கத்தால் குழந்தைகளுடைய மனநலமும் பாதிக்கப்படுகிறது. அவர்களிடையே ஒரு அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் நேர்மையாக இல்லாமல் பொய் சொல்லக் கூடும். உங்களிடம் உண்மையை சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லாத போக்கும் காணப்படும்.
நீங்கள் குழந்தை வளர்ப்பில் ஒருபோதும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை செய்யாமல் குழந்தைகளை புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்கவும் முயற்சி செய்யுங்கள். ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இதை நிச்சயமாக கடைபிடிப்பர்.
இதையும் படிங்க: நீங்க எப்படிப்பட்ட பெற்றோர்? இந்த '5' விஷயங்களை வெச்சு தெரிஞ்சுக்கோங்க!!