
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷியை டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அதிஷி பெயரை முன்மொழிந்தார். எம்எல்ஏக்கள் ஒருமனதாக அதிஷிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தார். ஞாயிற்றுக்கிழமை பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். மக்கள் தனக்கு நேர்மைக்கான சான்றிதழை வழங்கினால் மட்டுமே திரும்ப முதல்வராகப் போவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கிய முகமாக உள்ள அமைச்சர் அதிஷி முதல்வராகப் பதவியேற்பார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் நிதி, கல்வி உட்பட பல இலாகாக்களை தன்வசம் வைத்திருக்கிறார். இன்று மாலை டெல்லி ஆளுநரைச் சந்திக்கும் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அதிஷியை அடுத்த முதல்வராக முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியின் அரசுப் பள்ளிகளில் பெரிய கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்ததற்காக அதிஷிக்கு பரவலாகப் புகழாரம் சூட்டப்பட்டவர். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக, பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் "மகிழ்ச்சி பாடத்திட்டம்" மற்றும் "தொழில்முனைவு மனப்பான்மை பாடத்திட்டம்" போன்ற புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி கல்காஜி தொகுதியில் இருந்து டெல்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். இவர் முதலில் டெல்லி அரசாங்கத்தின் கல்வித் துறையின் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2020 தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
அதிஷி 1981ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் செவனிங் உதவித்தொகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தத்தப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
மார்ச் 2023 இல், சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்த பின்னர், அதிஷி டெல்லி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். கல்வி, பொதுப்பணித் துறை (PWD), மின்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கல்வி சார்ந்த பணியைத் தவிர, அதிஷி சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு வலுவான குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். டெல்லியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மை தொடர்பான கொள்கைகளை அவர் தீவிரமாக ஊக்குவித்துள்ளார்.
அதிஷி ஆம் ஆத்மி கட்சியிலும் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றபோது கட்சியை வழிநடத்திச் செல்பவராக இருந்தார். கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜெயிலில் இருக்கும் கெஜ்ரிவாலுக்குப் பதிலாக தேசியக் கொடையை ஏற்றிவைத்தார். தன்னைவிட மூத்த தலைவர்களையும் அரவணைத்து கட்சி குரலை எதிரொலிப்பவராக இருப்பதால் இவரை முதல்வராக்க கட்சியினர் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.