
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த பேரழிவு குறித்து கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டே கணித்துள்ளார். ஆம். 8-ம் வகுப்பு மாணவி தான் எழுதிய கதை ஒன்றில் வயநாடு நிலச்சரிவு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
லயா என்ற மாணவி, நீர்வீழ்ச்சியில் மூழ்கிய ஒரு பெண்ணைப் பற்றிய கதையை எழுதினார், அதில், வரவிருக்கும் பேரபத்து பற்றி இரண்டு நண்பர்களை எச்சரிக்க ஒரு பறவையாக திரும்பி வருகிறார். கடந்த ஆண்டு தனது பள்ளி இதழில் எழுதிய கதையில் “ மழை பெய்தால், நிலச்சரிவுகள் அருவியைத் தாக்கும், மனித உயிர்கள் உட்பட அவர்களின் பாதையில் உள்ள அனைத்தையும் மூழ்கடிக்கும்" என்று எழுதி உள்ளார்.
அந்த கதையில், அனஸ்வரா மற்றும் அலம்கிருதா என்ற இரு நண்பர்கள் தங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் ஒரு அருவியைப் பார்க்கச் செல்கிறார்கள். ஆனால் பறவை ஒன்று சிறுமியிடம் வந்து உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. "இப்போது புறப்படுங்கள், குழந்தைகளே, இது ஆபத்தானது" என்று பறவை சிறுமிகளை எச்சரிக்கிறது.
இதையடுத்து அந்த இரு நண்பர்களும் அங்கிருந்து ஓடுகின்றனர்.. அப்போது அந்த பறவை சிறு பெண்ணாக மாறுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள். தனக்கு நேர்ந்த அதே கதி, அந்த இருவருக்குக்கும் நேராமல் அவர்களை காப்பாற்றுகிறார் என்று கதை முடிகிறது.
லயா தனது பள்ளியின் டிஜிட்டல் பத்திரிகையில், 'அக்ரஹத்தின் துரனுபவம்' (ஆசையின் துயரம்) கதையை எழுதியுள்ளார். லயா கூறிய கதை ஓராண்டு கழித்து உண்மையாகி உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் லயாவின் தந்தையும் ஒருவர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணிக்கு முதல் நிலச்சரிவும், அதைத் தொடர்ந்து அதிகாலை 4:10 மணிக்கு ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை போன்ற பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு வயநாட்டில் உயர்மட்டக் கூட்டம் நடத்தி நிலைமையை ஆய்வு செய்தார். மீட்புப் பணியே முதன்மையானதாக இருக்கும் என்றும், விரைவில் மறுவாழ்வு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே இரவில் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு அரசு மட்டுமின்றி பல தன்னார்வ அமைப்புகளை அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் நிவாரண உதவியை அறிவித்து வருகின்றனர்.