தேர்தல் முடிஞ்சிருச்சு... கேஸ் சிலிண்டர் மானியம் இன்னும் எவ்வளவு நாளைக்கு... மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
First Published | Jun 24, 2024, 11:15 PM ISTமக்களவைத் தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிலிண்டர் மானியம் இன்னும் 9 மாதங்களுக்குத் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட நிலையில், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கான 300 ரூபாய் மானியமும் தொடர்ந்து இன்னும் 9 மாதங்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் 5 கிலோ சிலிண்டர் விலையும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பாஜக அரசு மக்களவைத் தேர்தலுக்கு முன் முதலில் 100 ரூபாயும் பிறகு மேலும் 200 ரூபாயும் சிலிண்டர் மானியத்தை அறிவித்தது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் குறைந்தது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த மானியத்தை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.12,000 கோடி கூடுதலாக செலவாகும். இந்த மானியத்தொகை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.300 வீதம் மானியம் கிடைக்கும்.
2016ஆம் ஆண்டு மே மாதத்தில் உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கப்படுகிறது. எல்பிஜி மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் சிலிண்டர் மானியம் பெற, http://mylpg.in/index.aspx என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யலாம். அதை பிரிண்ட் எடுத்து, நிரப்பி சிலிண்டர் விநியோகஸ்தர் மற்றும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அடுத்த சில நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் பெறுவதற்கான ஒப்புதல் கிடைக்கும்.