கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட யுஜிசி புதிய விதிமுறைகள், குறிப்பாக பட்டியல் சாதிகள் (SC), பழங்குடியினர் (ST), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் புகார்களைக் கையாள, நிறுவனங்கள் சிறப்பு குழுக்கள் மற்றும் உதவி எண்களை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டம்
யுஜிசியின் புதிய விதிமுறைகள் பொதுப் பிரிவு மாணவர்களிடையே பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த கட்டமைப்பு தங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வழிவகுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விதிகள் சமத்துவத்திற்குப் பதிலாக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக பல்வேறு இடங்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்திருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''யுஜிசியின் புதிய விதிகளில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் காட்டப்படாது. சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும் நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.