
தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கியுள்ளது. ஆரம்பமே மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கி வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 8 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கனமழையால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மழை பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் மீன்பிடிக்கச் சென்ற படகு மூழ்கியதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். எர்ணாகுளத்தில் மரம் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார். நம்பத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பல இடங்களில் மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் மரம் விழுந்ததால் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. காசர்கோட்டில் 18 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கண்ணூரில் வெள்ளம் சூழ்ந்ததால் பல குடும்பங்கள் மீட்கப்பட்டன.
ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் காற்றினால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை காரணமாக, இடுக்கி மாவட்டத்தில் 103 வீடுகள் பகுதியாகவும், 9 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு நதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மணிமலையாறு, அச்சன்கோவிலாறு, பம்பா, காசர்கோடு மாவட்டத்தில் மொக்ரால் நதி, நீலேஸ்வரம் பாலம், உப்பளா ஆகிய இடங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவாற்றுப்புழா, கண்ணூர் மாவட்டத்தில் பெரும்பா, குப்பம் நதி, காசர்கோட்டில் காரியங்கோடு நதி, கொல்லம் மாவட்டத்தில் பள்ளிக்கல், கோட்டயம் மாவட்டத்தில் மீனச்சிலாறு, கோழிக்கோடு மாவட்டத்தில் கோரப்புழா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் வாமனபுரம், வயநாடு மாவட்டத்தில் கபனி ஆகிய இடங்களில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆற்றங்கரைகள், அணைகளின் கீழ்ப்பகுதிகள் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கனமழை பெய்யும் நேரத்தில் ஆறுகளைக் கடக்கவோ, ஆறுகள் அல்லது நீர்நிலைகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களுக்கான சுற்றுலாப் பயணங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.