Published : Jul 29, 2025, 06:35 PM ISTUpdated : Jul 29, 2025, 06:49 PM IST
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி, டிரம்பின் போர்நிறுத்தக் கூற்று குறித்து மோடி மௌனம் காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். டிரம்ப் பொய் சொல்கிறார் என மோடி நாடாளுமன்றத்தில் கூற வேண்டும் என சவால் விடுத்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பகிரங்க சவால் விடுத்தார். மோடிக்கு தைரியம் இருந்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பொய் சொல்கிறார் என நாடாளுமன்றத்தில் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
24
டொனால்டு டிரம்ப் பேச்சுக்கு பதில் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு டரம்ப் இந்தியா – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்து அணு ஆயுத போரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதுவரை இதே கருத்தை 29 முறை டிரம்ப் கூறிவிட்டார், ஆனால் பிரதமர் மோடி அவருக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நடைபெற்ற விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மத்திய அரசின் அரசியல் உறுதிப்பாடு மற்றும் உத்தி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
34
இந்திரா காந்தி அளித்த சுதந்திரம்
"இந்திய ஆயுதப் படைகளைப் பயன்படுத்த நீங்கள் 100% அரசியல் உறுதியையும், முழு செயல்பாட்டு சுதந்திரத்தையும் வழங்க வேண்டும்" என்று காந்தி கூறினார். "1971 இல் அப்போதை பிரதமர் இந்திரா காந்தி ராணுவ ஜெனரல் மானெக்ஷாவுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தார். சுதந்திரமான செயல்பாடு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான அரசியல் உறுதிபாடு. அதனால்தான் பாகிஸ்தான் இந்தியாவிடம் அடிபணிந்தது" என்று ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் மோடிக்கு டிரம்ப்பின் கூற்றுகளை நேரடியாக எதிர்கொள்ள துணிச்சல் இருக்கிறதா என ராகுல் காந்தி சவால் விடுத்தார். "அவருக்கு (பிரதமர் மோடிக்கு) தைரியம் இருந்தால், டொனால்டு டிரம்ப் ஒரு பொய்யர் என்று இங்கே சொல்லட்டும். அவருக்கு தைரியம் இருந்தால், அவர் சாரி என்றும் சொல்வார்" என ராகுல் காந்தி கிண்டலாகக் கூறினார்.
"பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? டிரம்ப் பொய் சொல்கிறார் என்றால், அதைச் சொல்லுங்கள். நாடாளுமன்றத்தில் அதைச் சொல்லுங்கள்." என்று மீண்டும் வலியுறுத்தினார்.
"பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி டிரம்ப்புடன் அமர்ந்து விருந்து சாப்பிடுகிறார். அதைப்பற்றி மோடியால் டிரம்பிடம் கேள்வி எழுப்ப முடிந்ததா? மோடி தனது இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காகவே ராணுவத்தை பயன்படுத்திக்கொள்கிறார்." என்றும் ராகுல் காந்தி சாடினார்.