Published : Apr 03, 2025, 09:06 AM ISTUpdated : Apr 03, 2025, 09:09 AM IST
பிரதமர் மோடி தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக புறப்பட்டார். பிம்ஸ்டெக் உச்சி மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இந்த பயணம் இரு நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக புறப்பட்டார். தனது பயணத்தின் போது, பிம்ஸ்டெக் உச்சி மாநாடு உள்பட பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இது தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தனது பயணம் இந்த நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
“அடுத்த மூன்று நாட்களில், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அந்த நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களில் பங்கேற்பேன். இன்று மாலை பாங்காக்கில், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை சந்தித்து, இந்தியா-தாய்லாந்து நட்பு குறித்து விவாதிப்பேன். நாளை, பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறேன். தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னையும் சந்திப்பேன்” என பிரதமர் தனது பதிவில் கூறியுள்ளார்.
PM Modi with Sri Lanka President Anura Kumara Dissanayake
இலங்கைப் பயணம்:
மற்றொரு பதிவில் தனது இலங்கைப் பயணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து தாம் அந்நாட்டுச் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளார்.
"எனது இலங்கை பயணம் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும். அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்த பயணம் நடைபெறுகிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்புறவு குறித்து நாங்கள் ஆலோசிப்போம். இருதரப்பு ஒத்துழைப்பை புதிய வழிகளில் முன்னெடுத்துச் செல்வது பற்றியும் விவாதிப்போம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளை நான் எதிர்நோக்குகிறேன்" என்று பிரதமர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.