
Pahalgam attack mastermind's links revealed Karnataka and Kerala: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும் 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கர்நாடகா மற்றும் கேரளாவில் படித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ஷேக் சஜ்ஜாத் குல் என்ற பயங்கரவாதி தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டி.ஆர்.எஃப்) உடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு கர்நாடகா மற்றும் கேரளாவில் படித்துள்ளான்.
இந்த பயங்கரவாதி ஸ்ரீநகரில் கல்வி கற்றான். பெங்களூருவில் MBA பட்டம் பெற்றான். பின்னர் கேரளாவில் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் படித்தான். இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்குத் திரும்பியதும், அவன் ஒரு நோயறிதல் ஆய்வகத்தை நிறுவினான். அதை அவன் பயங்கரவாதக் குழுவிற்கு தளவாட ஆதரவை வழங்கப் பயன்படுத்தினான் என்று உளவுத்துறை மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது.
சஜ்ஜாத் அகமது ஷேக் என்றும் அழைக்கப்படும் குல், லஷ்கர் இ தொய்பா பாதுகாப்பில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 2020 முதல் 2024 வரை மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் நடந்த இலக்கு கொலைகள், 2023 இல் மத்திய காஷ்மீரில் கையெறி குண்டுத் தாக்குதல்கள், பிஜ்பெஹ்ரா, ககாங்கிர் மற்றும் காண்டர்பாலில் உள்ள இசட்-மோர் சுரங்கப்பாதையில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மீது பதுங்கியிருந்து தாக்குதல்கள் உள்ளிட்ட பல பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவன் தொடர்புடையவன்.
ஏப்ரல் 2022 இல் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஆல் பயங்கரவாதியாக நியமிக்கப்பட்ட குல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை விசாரித்த புலனாய்வாளர்கள், அவருடனான தொடர்பு தொடர்புகளைக் கண்டறிந்துள்ளனர். இது தாக்குதலைத் திட்டமிட்டதில் அவனுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது. படுகொலைக்கு பொறுப்பேற்ற இயக்கம் அவனது உத்தரவின் பேரில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
ஷேக் சஜ்ஜாத் குல் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ISI க்கு ஒரு முக்கிய சொத்தாக இருந்ததாகவும், அவன் பெரும்பாலும் பஞ்சாபி தலைமையிலான LeT க்கு காஷ்மீர் முன்னணியாகச் செயல்பட்டதாகவும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2002 ஆம் ஆண்டு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் 5 கிலோ RDX போதைப்பொருளுடன் அவன் கைது செய்யப்பட்டான். டெல்லியில் தொடர்ச்சியான திட்டமிட்ட குண்டுவெடிப்புகளுக்காக அவன் உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு அவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பிறகு, அவன் பாகிஸ்தானுக்கு சென்றான். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஐ.எஸ்.ஐ அவனை டி.ஆர்.எஃப்-ஐ வழிநடத்த நியமித்தது. உள்நாட்டு பயங்கரவாதக் குழு என்ற மாயையை உருவாக்கும் பாகிஸ்தானின் உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருந்தது. ஷேக் சஜ்ஜாத் குல்லின் சகோதரனும் ஒரு பயங்கரவாதி தான். ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் முன்னாள் மருத்துவராக இருந்த அவனது சகோதரன் பின்பு பாகிஸ்தானுக்கு சென்று பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.