
ஏமனில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைக் காப்பாற்ற இந்தியா தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது எனக் கூறப்படுகிறது.
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா ஏமன் அந்நாட்டைச் சேர்ந்த தலாலு அப்துல் மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரது தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இறந்தவரின் குடும்பத்தினர் ஏமன் சட்டப்படி இழப்பீட்டுத் தொகையை ஏற்கிறார்களா என்பதைப் பொறுத்தே இந்த வழக்கின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.
ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சனாவில் உள்ள ஏமன் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற நிமிஷா பிரியாவுக்கு ஏமனின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரே இறுதி முடிவை எடுக்க முடியும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீட்டை ஏற்று, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய முன்வரவில்லை. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கேரள எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ள மரண தண்டனையைத் தடுக்க பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தண்டனையைத் தடுக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு வெளியுறவு அமைச்சக அலுவலகத்துடன் தானும் இணைந்து செயல்படுவதாக கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்கிடையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரது விடுதலைக்கான முயற்சிகளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிமிஷாவின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிமிஷா பிரியா 2008 ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் மகளுடன் ஏமனுக்குச் சென்றார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிதி நெருக்கடி காரணமாக அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர். ஓராண்டு கழித்து, வாழ்வாதாரத்திற்காக மீண்டும் ஏமன் சென்ற நிமிஷா ஏமனைச் சேர்ந்த தலாலு அப்துல் மஹ்தியின் உதவியுடன் ஒரு கிளினிக்கை தொடங்கினார். ஆனால், மஹ்தி நிமிஷா பிரியாவை உடல் மற்றும் மனரீதியான கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மஹ்தி எடுத்து வைத்துக்கொண்டதால் நிமிஷா நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நிமிஷா 2017ஆம் ஆண்டில் மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து தனது ஆவணங்களை எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த மயக்க மருத்து அவரது மரணத்திற்கே வழிவகுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார்.
நிமிஷாவின் தாய் அவரைச் சந்தித்து நேரடியாகப் பேசியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசுகள் எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாகத் தலையிட்டுள்ளன என்று நிமிஷா பிரியா விடுதலைக்கான கவுன்சிலின் தலைவரும் நென்மாரா எம்.எல்.ஏ.வுமான கே. பாபு தெரிவித்துள்ளார். "இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் சாமுவேல் இன்று ஏமனுக்குப் புறப்படுவார். பணத்தைத் திரட்டுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் அவர் ஆராய்ந்தார்," என்று கே. பாபு கூறினார்.
முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்த வழக்கில் தலையிட விருப்பம் தெரிவித்தபோது சில நம்பிக்கைகள் எழுந்தன. இருப்பினும், தற்போதைய அரசியல் மற்றும் தூதரக சூழலில், அத்தகைய தலையீடு இப்போது சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
ஜூலை 16 ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக இருக்கும்.