மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 3) இரண்டு விமானங்கள் உரசிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவைக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும், ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானமும் ஒன்றுடன் ஒன்று லேசாக மோதிக் கொண்டன. இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
அதாவது ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது ஹைதராபாத்தில் இருந்து தரையிறங்கி டாக்ஸிவேயில் வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் இறக்கையுடன் உரசியது. இதனால் இரு விமானத்திலும் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நல்ல வேளையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பயணிகள் நிலை என்ன?
இந்த சம்பவம் குறித்து விளக்கம அளித்த ஏர் இந்தியா, ''எங்கள் விமானத்தின் இறக்கை முனை சேதமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரைையிறக்கப்பட்டு தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் தரைப்பகுதியில் நகர்ந்து சென்றபோது மற்றொரு விமானத்துடன் மோதியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை ஆனையம் விசாரணை நடத்தி வருகிறது.