
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தல் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜகவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் அதிகாரத்தை தீர்மானிப்பது மட்டுமல்லாமல், இடதுசாரி அரசியலின் எதிர்காலம், காங்கிரஸின் ஸ்திரத்தன்மை, பாஜகவின் லட்சியங்களிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி ஒரே மாநிலம் கேரளா. மேற்கு வங்கம், திரிபுராவில் அதிகாரத்தை இழந்த பிறகு, இடதுசாரிக் கட்சிகளின் ஒரே கோட்டையாக கேரளா மட்டுமே.
இந்தத் தேர்தல் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் அரசுக்கு ஒரு வாய்ப்பையும், சவாலையும் அளிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததின் மூலம், கம்யூனிஸ்டு கேரளாவில் சாதனை படைத்தது. அங்கு வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கட்சிகள் ஆட்சி அமைப்பது தான் வழக்கம். கம்யூனிஸ்டு இப்போது ஒரு வரலாற்று ஹாட்ரிக் வெற்றியை நோக்கிச் செல்கிறது. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஒரு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், பினராயி விஜயன் கட்சி, கூட்டணியைத் தாண்டிய ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார். அவரது நிர்வாக, அரசியல் முடிவுகள் பெரும்பாலும் பாரம்பரிய இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து விலகி, சில கூட்டணி கூட்டாளிகளையும் கடுமையான இடதுசாரிகளையும் கவலையடையச் செய்துள்ளன. ஆனாலும், 80 வயதான பினராயி சிபிஎம் மற்றும் எல்.டி.எஃப்-ன்ன் மிகவும் செல்வாக்கு மிக்க முகமாகத் தொடர்கிறார். 2026 போர் தேர்தல் வியூகம் அவரால் வழிநடத்தப்படும்.
உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட சமீபத்திய தோல்வி கம்யூனிஸ்டுக்கு சிரமங்களை அதிகரித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்கள் சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று கருதப்படவில்லை. ஆனாலும், தோல்வியின் அளவு வளர்ந்து வரும் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை உணர வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான தங்கத் திருட்டு வழக்கில் இருந்து எழும் சமூக அமைதியின்மை கம்யூனிஸ்டுக்கு கவலையாக உள்ளது. கடந்த காலங்களில், சபரிமலை சர்ச்சைகளால் 2019 மக்களவைத் தேர்தல்களில் கம்யூனிஸ்டு பெரும் தோல்விகளைச் சந்தித்தது.
இந்தத் தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப்-க்கு உயிர்வாழ்வதற்கான ஒரு போர். 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சியாக இருந்த கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸுக்கு சவாலானவை. சமீபத்திய மக்களவைத் தேர்தல்களில் கேரள காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் இங்கு அரசியல் ஆதரவைப் பெற்றனர். மாநிலத்தில் அதிகாரத்தில் இல்லாதது காங்ஜ்கிரஸ் கட்சிக்கு அசாதாரண சூழ்நிலையாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப்-ன் பாரம்பரிய சமூக அடித்தளமும் பலவீனமடைந்தது. சில இந்து, கிறிஸ்தவ ஆதரவாளர்கள் பாஜகவுக்கு மாறினர்.
கட்சியின் மந்தநிலை, உள் கோஷ்டி மோதல், தலைமைத்துவ குழப்பம் ஆகியவை காங்கிரஸின் பலத்தை அரித்துவிட்டன. ஆனாலும், சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களிலும் சில சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் யுடிஎஃப் பெற்ற வெற்றிகள் மீண்டும் வருவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளன. ஆட்சிக்கு எதிரான அலையிலிருந்து அது பயனடைவதாகத் தெரிகிறது. ஆனாலும், காங்கிரஸின் மிகப்பெரிய சவால் ஒரு வலுவான முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவது. வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, சசி தரூர் போன்ற பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. ஆனால், இப்போதைக்கு கூட்டணி கட்சிகளின் தயவின் அடிப்படையில் மட்டுமே தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
கேரளா நீண்ட காலமாக பாஜகவுக்கு சிக்கலான மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அந்த நிலை மாறி வருவதாகத் தெரிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக முதல் முறையாக மாநிலத்தில் ஒரு இடத்தைப் பிடித்தது. கிட்டத்தட்ட 20% வாக்குகளைப் பெற்றது. பல சட்டமன்றத் தொகுதிகளில் கட்சியின் வலுவான செயல்பாடுகளால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு என இரண்டையும் கதிகலங்கச் செய்து வருகிறது. கேரளாவில் தனது அமைப்பை வலுப்படுத்த பாஜக புதிய தலைமையை நியமித்துள்ளது. இந்த முறை ஒரு தீவிரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறது. தேர்தல் கணக்கீடுகளை பாதிக்கக்கூடிய ஒரு நிலையான மூன்றாவது சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பாஜகவின் குறிக்கோள்.